IPL 2027: பென் ஸ்டோக்ஸை வாங்க வாய்ப்புள்ள 5 அணிகள்? சிஎஸ்கே, கேகேஆர் இடையே போட்டி
IPL 2027: பென் ஸ்டோக்ஸை வாங்க வாய்ப்புள்ள 5 அணிகள்? சிஎஸ்கே, கேகேஆர் இடையே போட்டி
மும்பை: இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், வரவிருக்கும் ஐபிஎல் 2027 மினி ஏலத்தில் ₹2 கோடி அடிப்படை விலையில் தன் பெயரைப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் வரும் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு செல்லக்கூடிய வீரராக அவர் உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
35 வயதான ஸ்டோக்ஸ் 2023-ஆம் ஆண்டிற்கு பிறகு முதல்முறையாக மீண்டும் ஐபிஎல் ஏலப் பட்டியலுக்குத் திரும்ப இருக்கிறார். 2026-இல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு பெற்றது, ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டிற்கு அவர் மீண்டும் திரும்புவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் பங்களிக்கும் திறன் மற்றும் அவரது கேப்டன்ஷி அனுபவம் ஆகியவை காரணமாக, பல ஐபிஎல் ஃபிரான்சைஸிகள் பென் ஸ்டோக்சை வாங்க பரிசீலிக்கலாம்.ஐபிஎல் 2027 ஏலத்தில் பென் ஸ்டோக்ஸை வாங்க அதிக வாய்ப்புள்ள ஐந்து அணிகள் குறித்து இங்கு காண்போம்.
பென் ஸ்டோக்ஸை மீண்டும் அணிக்குக் கொண்டுவருவதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக முக்கியமான போட்டியாளர்களில் ஒன்றாக இருக்கலாம். ஐபிஎல் 2023 ஏலத்தில் சிஎஸ்கே நிர்வாகம் ஸ்டோக்ஸை ₹16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. எனினும், முழங்கால் காயம் காரணமாக அந்த சீசனில் அவரால் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது.
தரமான வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரின் தேவை உள்ளதால், சென்னை ஃபிரான்சைஸ் இவரை மீண்டும் பரிசீலிக்க வாய்ப்புள்ளது. சிவம் துபே பேட்டிங் வரிசைக்கு பலம் சேர்த்தாலும், ஸ்டோக்ஸ் கூடுதல் வேகப்பந்து வீச்சு வாய்ப்பையும் நடுத்தர வரிசையில் அனுபவத்தையும் வழங்க முடியும்.
முன்பு சிஎஸ்கே அணியில் இருந்ததும் அவருக்கு சாதகமாக அமையலாம். இருப்பினும், சென்னை அணி தனது ஏல பட்ஜெட் மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்களை பொருட்டு முடிவு எடுக்க வேண்டியிருக்கும்.
தங்களது ஆல்ரவுண்டர் படையை வலுப்படுத்த விரும்பினால், மும்பை இந்தியன்ஸ் அணியும் பென் ஸ்டோக்ஸை வாங்குவதற்கான போட்டியில் களமிறங்கலாம். அதிரடி பேட்டிங், வேகப்பந்து வீச்சு மற்றும் தலைமைத்துவ அனுபவம் ஆகியவற்றின் கலவையை ஸ்டோக்ஸ் வழங்குகிறார்.
மேல் வரிசை மற்றும் நடுத்தர வரிசையில் பேட்டிங் செய்யும் அவரது திறன், மும்பை அணியின் ஆடும் லெவனில் கூடுதல் பலத்தை வழங்கும்.இருப்பினும், தீவிரமாக ஏலம் கேட்பதற்கு முன், மும்பை இந்தியன்ஸ் தங்கள் அணியின் வெளிநாட்டு வீரர்களின் கலவையை பரிசீலிக்க வேண்டும்.
பென் ஸ்டோக்சை வாங்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மற்றொரு தீவிரமான போட்டியாளராக இருக்கலாம்.கேகேஆர் அணி ஏலத்திற்கு செல்லும்போது போதுமான நிதி வசதியை கொண்டுள்ளது. எனவே, அனுபவமிக்க வெளிநாட்டு வீரரை அவர்கள் தேடலாம்.
ஸ்டோக்ஸ் அவர்களின் நடுத்தர பேட்டிங் வரிசையை வலுப்படுத்துவதோடு, கூடுதல் வேகப்பந்து வீச்சு ஆப்சனையும் வழங்குவார். தற்போது ரஹானே ஓய்வு பெற்று இருப்பதால், பென் ஸ்டோக்ஸ் கொல்கத்தா அணியின் கேப்டன்ஷி பதவிக்கு பொருத்தமான நபராக இருப்பார். கேகேஆர் அணியில் கேமரூன் கிரீன் இருக்கும் நிலையில், ஸ்டோக்சும் வந்தால் அந்த அணியின் பலத்தை இது மேலும் அதிகரிக்க கூடும்.
2018 முதல் 2021 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய பென் ஸ்டோக்ஸுடன் அந்த அணிக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய 31 போட்டிகளில் 604 ரன்கள் குவித்து 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.தங்களது நடுத்தர வரிசையை பலப்படுத்தவும், மற்றொரு வேகப்பந்து வீச்சு தேர்வைப் பெறவும் அவரை மீண்டும் அணிக்குக் கொண்டுவர பரிசீலிக்கலாம்.
பென் ஸ்டோக்ஸுக்கான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் ஒரு முக்கிய போட்டியாளராக உருவெடுக்கக்கூடும்.பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் பங்களிக்கக்கூடிய அனுபவமிக்க வெளிநாட்டு ஆல்ரவுண்டரைச் சேர்ப்பதன் மூலம் டெல்லி அணி பயன்பெறலாம்.
நெருக்கடியான சூழ்நிலைகளைக் கையாண்டு போட்டியின் போக்கை மாற்றும் ஸ்டோக்ஸின் திறன், டெல்லி அணிக்கு ஒரு சிறந்த தேர்வாக அமையும். டெல்லி அணி தங்கள்பேட்டிங் வரிசை மற்றும் வேகப்பந்து வீச்சு கலவையில் குறையை கண்டறிவதால், ஏலத்தில் ஸ்டோக்ஸ் அவர்களின் தேர்வுகளில் ஒருவராக மாறக்கூடும்.
ஸ்டோக்ஸ் 45 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 935 ரன்கள் எடுத்து 28 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இருப்பினும், 2024-க்குப் பிறகு அவர் எந்தவொரு டி20 போட்டியிலும் விளையாடவில்லை என்பதால், அவரது உடற்தகுதி ஒரு முக்கிய விவாதப் பொருளாக உள்ளது.பிக் பாஷ் லீக்கில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக ஸ்டோக்ஸ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அவரது ஃபார்மை மதிப்பிட ஃபிரான்சைஸ்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கும்.