📅 Tuesday, 01 September 2026 IST | ஆவணி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 01, 2026 08:04 PM

சிங்கப்பூர் அடுத்த இரு வாரங்களில் புகைமூட்டத்தை எதிர்பார்க்கலாம்

சிங்கப்பூர் அடுத்த இரு வாரங்களில் புகைமூட்டத்தை எதிர்பார்க்கலாம்

சிங்கப்பூர், அடுத்த இரண்டு வாரங்களில் புகைமூட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.

இவ்வட்டாரத்தில் வறண்ட வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால் செப்டம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் சிங்கப்பூரில் புகைமூட்டம் நிலவக்கூடும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.

இரண்டாம் வாரத்தில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என்ற போதிலும் இந்நிலை தொடரக்கூடும்.

சிங்கப்பூரைச் சுற்றியுள்ள வட்டாரத்தில் காட்டுத்தீ மையங்களின் வீரியம் அதிகரித்து, தென்கிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் பலத்த காற்று வீசினால் புகைமூட்டம் ஏற்படலாம் என்று அந்த நிலையம் கூறியது.

செவ்வாய்க்கிழமை அன்று (செப்டம்பர் 1) அது, இருவார வானிலை நிலவரத்தை வெளியிட்டது.

தற்போது நிலவும் வறண்ட வானிலையால், சுற்றியுள்ள வட்டாரத்தில் காட்டுத்தீ மையங்களும் புகைமூட்ட நிலவரமும் தீவிரமடைந்துள்ளதாக அது குறிப்பிட்டது.

ஆகஸ்ட் 21 முதல் தெற்கு, மத்திய சுமத்ரா, கலிமந்தானின் பல்வேறு பகுதிகளில் அடர்ந்த புகைமூட்டம் காணப்பட்டது.

இந்நிலையில் தேசியச் சுற்றுப்புற வாரியம் (என்இஏ) நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து, மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் தகவல்களை வழங்கும்,” என்று வானிலை நிலையம் கூறியது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

24 மணி நேரக் காற்றுத் தரக் குறியீடு (பிஎஸ்ஐ) 101 முதல் 200 வரையிலான ஆரோக்கியமற்ற நிலையை எட்டினால், வாரியம் தினசரி புகைமூட்ட அறிக்கைகளை வெளியிடும்.

குறிப்பாக, செப்டம்பர் முதல் வாரத்தில், பெரும்பாலான நாள்களில் மிதமான காற்று வீசக்கூடிய வானிலையே எதிர்பார்க்கப்படுகிறது.

சில நாள்களில் பிற்பகல், மாலையில் தீவின் சில பகுதிகளில் லேசான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். செப்டம்பர் முதல் இருவாரத்திற்கான மொத்த மழைப்பொழிவு, தீவின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியைவிடக் குறைவாகவே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான நாள்களில் தினசரி அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். சில நாள்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியசை சற்று தாண்டக்கூடும். இரவு நேரங்களில் வெப்பமும் புழுக்கமும் நிலவக்கூடும் என்றும், பெரும்பாலான இரவுகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்கும் என்று வானிலை ஆய்வு நிலையம் மேலும் கூறியுள்ளது.