📅 Tuesday, 01 September 2026 IST | ஆவணி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 01, 2026 08:00 PM

மூவர் மீது ஊழல் குற்றச்சாட்டு

மூவர் மீது ஊழல் குற்றச்சாட்டு

ஊழல், கணக்குகளைப் பொய்ப்பித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், ‘செர்டிஸ் சிஸ்கோ செக்யூரிட்டி’ அமைப்பின் உதவித் துணைத் தலைவர் உட்பட மூன்று பேர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

55 வயது லூயிஸ் பே நாய் யாங் என்பவர் லஞ்சம் பெற்றதாகச் செவ்வாய்க்கிழமை ( செப்டம்பர் 1) குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

‘செர்டிஸ் சிஸ்கோ’ செக்யூரிட்டியின் ரகசியத் தகவல்களை வெளிப்படுத்தியதற்கான வெகுமதியாக, 53 வயது ஏமோஸ் காங் எங் செங் என்பவரிடமிருந்து $2,000 முதல் $3,000 வரையிலான லஞ்சப் பணத்தை பே பெற்றதாக ஊழல், லஞ்ச ஒழிப்புப் புலனாய்வுப் பிரிவு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டபோது, காங் என்பவர் ‘செக்யூரிட்டி & ரிஸ்க் சொல்யூஷன்ஸ்’ (SRS) நிறுவனத்தின் இயக்குநராகவும் பங்குதாரராகவும் செயல்பட்டார்.

‘செர்டிஸ் சிஸ்கோ செக்யூரிட்டி’ என்பது தெமாசெக் ஹோல்டிங்சின் துணை நிறுவனமாகும்.

ரகசியத் தகவலை வெளிப்படுத்தியதற்காக லஞ்சம் கொடுத்தது மற்றும் கணக்குகளைப் பொய்ப்பித்தது தொடர்பாக காங் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவரது குற்றச்சாட்டுகள் ‘பைக்அபேக்’ (Bikeabag) என்ற ஆடம்பரப் பொருள் விற்பனைத் தளத்துடனும் தொடர்புடையவை.

மே 2017க்கும் அக்டோபர் 2018 க்கும் இடைப்பட்ட காலத்தில், காங்கும் 50 வயது நிக்கோலஸ் கோ சுவீ சியோங் என்ற மற்றொரு நபரும் இணைந்து, எந்தவொரு சேவையும் வழங்கப்படாத நிலையில் $79,400 மதிப்புள்ள சேவைகளுக்கான பதிவுகளைச் செய்து, ‘எஸ்ஆர்எஸ்’, ‘பைக்அபேக்’ ஆகிய நிறுவனங்களின் கணக்குகளைப் பொய்ப்பித்ததாக ஊழல், லஞ்ச ஒழிப்புப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன, ஜூலை 2020 முதல் ஜூன் 2025 வரை, எந்தச் சேவைகளும் வழங்கப்படவில்லை என்பதை அறிந்தும், 57 விலைப்பட்டியல்களில் கிட்டத்தட்ட $501,200 தொகையை 55 முறை தவறாகப் பதிவு செய்து இவ்விரு நிறுவனங்களின் கணக்குகளை இவர்கள் பொய்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

ஏமாற்றுதல் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் கோ, எஸ்ஆர்எஸ் நிறுவனத்துடன் எவ்வாறு தொடர்பிலிருந்தார் என்பது குறிப்பிடப்படவில்லை.

மார்ச் 2021ல், ‘காம்பிரஹென்சிவ் சப்போர்ட் சர்வீசஸ்’ என்ற மற்றொரு நிறுவனத்திடமிருந்து எந்த வேலையும் செய்யாமல் $48,000 கட்டணத்தைப் பெற்று, எஸ்ஆர்எஸ் நிறுவனத்தின் கணக்குகளைப் பொய்ப்பித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஊழலைச் சிங்கப்பூர் எவ்விதத்திலும் பொறுக்காத கடுமையான அணுகுமுறையைக் கொண்டுள்ளது என்று ஊழல், லஞ்ச ஒழிப்புப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கணக்குகளைப் பொய்ப்பிக்கும் குற்றத்திற்காக அபராதமோ 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ விதிக்கப்படலாம்.

லஞ்சம் கொடுக்கும் குற்றத்திற்கு, $100,000 வரை அபராதமோ 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ விதிக்கப்படலாம்.