ஊழியர் மீது பேருந்தை ஏற்றிய ஓட்டுநருக்குச் சிறை
ஆன்சன் சாலையில் பேருந்தை வலப்பக்கம் திருப்பிக்கொண்டிருந்த அதன் ஓட்டுநர், அங்கு நின்றுகொண்டிருந்த கட்டுமான ஊழியர் ஒருவரைக் கவனிக்காமல் பேருந்தை அவர் மீது ஏற்றினார்.
இந்தியாவைச் சேர்ந்த அந்த 35 வயது ஊழியரின் வலது கணுக்காலில் முறிவு ஏற்பட்டதுடன், இடது முழங்காலிலும் கடுமையான காயம் ஏற்பட்டது.
உரிய கவனமின்றி வாகனம் ஓட்டிப் பலத்த காயத்தை ஏற்படுத்தியதை ஒப்புக்கொண்ட 50 வயது பேருந்து ஓட்டுநரான முகம்மது ஹடி அப்துல்லாவுக்கு செப்டம்பர் 1ல் மூன்று வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன், ஐந்து ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டுவதற்கான தடையையும் அவர் எதிர்நோக்குகிறார்.
2024ஆம் ஆண்டு ஜூன் 27 மாலை ஐந்தரை மணியளவில், தஞ்சோங் பகாரில் உள்ள பாமர் சாலையிலிருந்து ஆன்சன் சாலையை நோக்கி முகம்மது ஹடி என்ற அந்த ஓட்டுநர் ‘எஸ்எம்ஆர்டி’ பேருந்தை ஓட்டிச் சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
போக்குவரத்து விளக்கு பச்சையாக இருந்ததால், முகம்மது ஹடி ஆன்சன் சாலையின் நான்காவது தடத்தில் வலப்பக்கம் திரும்பினார்.
கட்டுமான நிறுவனம் ஒன்றில் போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பணியாளராகப் பணிபுரிந்து வந்த ஊழியர், ஆன்சன் சாலையின் நான்காவது தடத்தில், வரும் வாகனங்களுக்குப் பின்புறம் காட்டியபடி நின்று கொண்டிருந்தார்.
வலப்பக்கம் திரும்பும்போது சாலையில் அந்த ஊழியர் நின்று கொண்டிருப்பதை முகம்மது ஹடி பார்க்காததால், பேருந்து அவர் மீது மோதி அவரைக் கீழே தள்ளியது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
பேருந்தின் முன் இடதுபக்க சக்கரம் தொழிலாளியின் கால்கள் மீது ஏறியது. ஆயினும் பின்னே இருந்த சக்கரம் அவர் மீது படாமல் நூலிழையில் தவறியது.
பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு உதவுவதற்காக முகம்மது ஹடி பேருந்தை நிறுத்தினார், பின்னர் அந்த ஊழியர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு கணுக்கால் முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு 86 நாள்கள் மருத்துவமனை விடுப்பு வழங்கப்பட்டது.
உரிய கவனமின்றி வாகனம் ஓட்டிப் பலத்த காயத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக, $5,000 வரை அபராதமோ இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ விதிக்கப்படலாம்.