சிங்கப்பூர் மரங்கள்: கேலிச்சித்திர நூல் வெளியீடு
சிங்கப்பூரர்களின் கவனத்தை வசப்படுத்திய அரியவகை மரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது பிள்ளைகளுக்கான ஒரு கேலிச்சித்திர நூல்.
சிங்கப்பூரில் அழிந்துவிட்டதாக நம்பப்பட்ட 150 வயது அரியவகை ‘சங்கல் மரம்’ 2002ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், கண்டுபிடிக்கப்பட்ட இரண்டே மாதங்களில் கவனக்குறைவாக அந்த மரம் வெட்டப்பட்ட சம்பவம் சிங்கப்பூரர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
சம்பவத்தைத் தொடர்ந்து சாங்கி வில்லேஜ் பகுதிக்கு அருகே அடிமரம் மட்டுமே எஞ்சியிருந்தது. சிங்கப்பூரின் வரலாற்றில் இடம்பிடித்த அந்த மரத்தைப் பிள்ளைகளுக்கு நினைவூட்டுகிறது ‘ஓவன் அன்ட் த சாங்கி ட்ரீ’ நூல்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேட்டின் முன்னாள் செய்தியாளர் அலன் ஜானின் எழுத்திலும் குவெக் ஹொங் ஷின்னின் விளக்கப் படத் தயாரிப்பிலும் நூல் உருவானது.
இருவரும் இத்தகைய படைப்பில் இணைந்து செயல்படுவது இது ஐந்தாவது முறை.
2002ஆம் ஆண்டு மரம் வெட்டப்பட்டது குறித்த செய்தி வெளியானபோது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழில் ஜான் வேலை செய்துகொண்டிருந்ததைப் பகிர்ந்துகொண்டார்.
அரியவகை மரம் வெட்டப்பட்டதைவிட அந்தச் சம்பவத்திற்குப் பொதுமக்கள் வெளிப்படுத்திய துக்கம்தான் தம்மை அதிகமாக ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாக ஜான் கூறினார்.
“ஒரு தனிநபருக்கோ விலங்கிற்கோ பாதிப்பு ஏற்படவில்லை. ஒரு மரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு மக்கள் இந்த அளவு துக்கத்தை வெளிப்படுத்தியதில் நெகிழ்ச்சியடைந்தேன்,” என்றார் அவர்.
பலர் வாசகர் கடிதங்களைச் செய்தித்தாள்களுக்கு அனுப்பியதுடன் சாங்கி பகுதியில் அடிமரம் இருந்த பகுதியில் திரண்டோர் துக்கத்தை வெளிப்படுத்தினர் என்று ஜான் சொன்னார்.
வெட்டப்பட்ட மரம் கொண்டுசெல்லப்பட்ட ஆலைக்கே சென்ற சிலர் அங்கிருந்து சில மரக் கட்டைகளை மீட்டு சிற்பங்களாக அவற்றை செதுக்கினர்.
மக்களின் சினம் காரணமாக மரம் வெட்டப்பட்டதற்குக் காரணமாக இருந்த நிறுவனத்திற்கு இதுவரை இல்லாத அளவில் அபராதம் விதிக்கப்பட்டதுடன் சிங்கப்பூரின் மரபுடைமை மரங்களை இன்னும் சிறந்த முறையில் பாதுகாக்க சட்டத் திருத்தங்களும் செய்யப்பட்டன.