சிங்கப்பூர் ஒருங்கிணைப்பு: தினேஷ் வாசு தாஸ் கருத்துக்கள்
சிங்கப்பூரின் வளர்ச்சி எப்போதுமே நீண்டகாலத் தொலைநோக்குப் பார்வை, நல்லாட்சி, பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்களின் பங்களிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளது என்று கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தெரிவித்துள்ளார்.
“பொருளியலின் திறந்தநிலையை நமது சமூக ஒப்பந்தத்திலிருந்து பிரிக்க முடியாது. நம்பகமான உலகளாவிய மையமாக சிங்கப்பூர் தொடர்ந்து நிலைத்திருக்க, இருதரப்பு மரியாதை, சமூக நல்லிணக்கம், ஒருங்கிணைப்பு என்பது இருவழிப் பாதை என்ற புரிதலில்தான் அடங்கியுள்ளது,” என்று அவர் கூறினார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் (சிங்கப்பூர்க் கிளை) ஏற்பாட்டில் நடந்தேறிய அனைத்துலக மாநாட்டில் மேடையில் திரு தினேஷ் உரையாற்றினார்.
இணைப்புத் தன்மை, நிலைத்தன்மை, பன்முகக் கலாசாரச் சமூகம் ஆகியவை சிங்கப்பூரை மக்கள், சிந்தனைகள், தொழில்முனைப்பு ஆகியவற்றுக்கான மையமாக மாற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நவம்பர் 28, 29ஆம் தேதிகளில் ‘நோவோட்டல் சிங்கப்பூர் ஆன் ஸ்டீவன்ஸ்’ (Novotel Singapore on Stevens) ஹோட்டலில் நடைபெற்ற இரண்டு நாள் மாநாட்டில் தமிழ்நாட்டின் முன்னைய அரசு தலைமைச் செயலாளர் வி.இறையன்பு, முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தினகரன், முஹம்மது இர்ஷாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
“உலகெங்கிலுமிருந்து வருபவர்கள் கொண்டு வரும் கண்ணோட்டங்களை சிங்கப்பூரர்கள் மதிக்கிறார்கள். உங்களில் பலர் சிங்கப்பூரை உங்கள் இல்லமாகக் கருதுகிறீர்கள். இந்தச் சமூகத்தின் ஓர் அங்கமாக இருப்பதற்கான அர்த்தத்தை நீங்கள் அறிவீர்கள்,” என்று திரு தினேஷ் கூறினார்.
1997ல் அதிகாரபூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் (சிங்கப்பூர்க் கிளை) தற்போது 1,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில் நடைபெற்ற உரையாடல்கள், முன்னாள் மாணவர்களுக்குத் தொடர்பு வட்டமாகத் திகழ்வது மட்டுமன்றி, சிங்கப்பூருக்கும் இம்மாநாட்டில் பங்கேற்ற நாடுகளுக்கும் பயனளிக்கும் கூட்டுறவுகளுக்கு வித்திடும் என்று திரு தினேஷ் நம்பிக்கை தெரிவித்தார்.
“திறந்த மனப்பான்மையுடனும் ஒற்றுமையுடனும் இருக்கும் சிங்கப்பூரில்தான் இந்தப் பங்காளித்துவங்கள் செழிக்கும். அது நாம் ஒருவருக்கொருவர் எவ்வாறு பழகுகிறோம், வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தே அமைகிறது,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரைத் தங்களது சொந்த இல்லமாக மாற்றிக்கொள்வதற்கான மூன்று எளிய வழிகள் குறித்து திரு தினேஷ் மேலும் விரிவாகக் கூறினார்.
உள்ளூர்த் திறனாளர்களின் வளர்ச்சியில் முதலீடு செய்வது, சிண்டா போன்ற அமைப்புகள்வழி சமூகத் தொண்டு மூலம் சமூகத்திற்குப் பங்களிப்பது, சமூக, சமய, அடிமட்டத் தலைவர்கள் ஒன்றிணையும் ‘நல்லிணக்க வட்டங்கள்’ போன்ற முயற்சிகள் மூலம் அண்டைவீட்டாருடன் பழகுவது ஆகிய வழிமுறைகளை அவர் பரிந்துரைத்தார்.
பல்வேறு துறைகளில் உள்ளவர்களின் நிபுணத்துவ அறிவு எல்லாருக்கும் சென்றுசேர்ப்பதும் மக்களை ஒன்றிணைப்பதும் கிட்டத்திட 30 பேச்சாளர்கள் பங்கேற்ற இம்மாநாட்டின் முக்கிய நோக்கம் என்று தமிழ் முரசிடம் சங்கத்தின் தலைவர் பெருமாள் மூர்த்தி கூறினார். “கடந்த 27 ஆண்டுகளாக தீபாவளி, பொங்கல் திருவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகளிலும் கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தமிழ்மொழி விழாவிலும் நாங்கள் தொடர்ந்து பங்கேற்று வருகிறோம். சிங்கப்பூரில் ஆழமாக வேரூன்றி இங்குள்ள மக்களோடு ஒன்றிணைந்து வாழ்வதே எங்கள் சங்கத்தின் மிகப்பெரிய வெற்றியாகும்,” என்றார் திரு மூர்த்தி.