சட்டமா... மனிதநேயமா?
சட்டமா... மனிதநேயமா? - ரத்தான அரசு வேலை... கலங்கி நிற்கும் கரூர் குடும்பங்கள்!
என் மகள் பிரியதர்ஷினிக்கு க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துல ஜூனியர் அசிஸ்டன்ட்டாக வேலை கொடுத்திருந்தாங்க. என்ன வேலை கொடுத்தாலும், அது என் மகன் உயிருக்கு ஈடாகாது
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி நியமனங்களை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்துசெய்திருப்பது புதிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சட்ட நடைமுறையை மனுதாரர்கள் வலியுறுத்தும் நிலையில், வாழ்வாதார நம்பிக்கையை இழந்துவிட்டதாக, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வேதனை தெரிவிக்கின்றன.
2025-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, ‘அந்த உயிரிழப்புகளால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்’ என்று அறிவித்த விஜய், கடந்த ஜூலை 10-ம் தேதி அதற்கான பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இதையடுத்து, நாம் தமிழர் கட்சி நிர்வாகி உள்ளிட்ட மூவர், அரசு வழங்கிய பணி நியமன ஆணையை ரத்துசெய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
“கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றம் மற்றும் சி.பி.ஐ விசாரணையில் இருக்கும் நிலையில், நிர்வாக உத்தரவின் மூலம் அரசுப் பணி வழங்குவது சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல” என்பதே மனுதாரர்களின் முக்கிய வாதமாக இருந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், “உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, சாதாரண அரசுப் பணி வழங்கியிருப்பதாகத் தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது. அவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட மாற்று உதவிகளை அரசு வழங்கலாம்” என்று கருத்து தெரிவித்ததோடு, வழங்கப்பட்ட பணி நியமன ஆணைகளையும் ரத்துசெய்து உத்தரவிட்டது.
மனுதாரர்களில் ஒருவரும், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான தீரன் திருமுருகனிடம் பேசினோம். “முதல்வர் விஜய் மீதோ, அமைச்சர்கள் மீதோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக இந்த வழக்கைத் தொடரவில்லை. எந்த அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்பட்டது என்பதைத்தான் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தோம். தனிப்பட்ட முறையில் நிதியுதவி செய்யலாம், மறுவாழ்வுக்கான திட்டங்களை அறிவிக்கலாம். ஆனால், சட்ட விதிகளை மீறி அரசு வேலை வழங்குவது தவறான முன்னுதாரணமாகிவிடும். சட்டத்தின் அடிப்படையில் இப்படிச் செய்தது தவறு. அதனால்தான், வழக்கு தொடர்ந்தோம். நீதிமன்றமும் அதையே ஏற்றுக்கொண்டிருக்கிறது” என்றார்.
அம்மாவை இழந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த குணசேகர், “வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சியில இளநிலை உதவியாளரா பணி நியமனம் வழங்கினாங்க. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்ச நான், ஏற்கெனவே கரூர்ல இருக்குற ஒரு தனியார் நிறுவனத்துல வேலையில் இருந்தேன். அரசாங்க வேலைங்கிறதால, தனியார் வேலையை ராஜினாமா பண்ணிட்டு இதுல சேர்ந்தேன். இப்போ பழைய வேலையும் இல்லை; புதிய வேலையும் கேள்விக் குறியாகிடுச்சு. ஒரு மாசத்துக்குள்ள வாழ்க்கையே தலைகீழாயிடுச்சு” என்றார் கவலையுடன்.
மகனை இழந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த துரைசாமி, “என் மருமக அகிலாவுக்கு ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலகத்துல அலுவலக உதவியாளராக வேலை கொடுத்திருக்காங்க. ரெண்டு சின்னக் குழந்தைகளை வெச்சுக்கிட்டு அவரோட எதிர்காலம் என்ன ஆகும்ங்கிற கவலைதான் எங்களை வாட்டிச்சு. இந்த அரசு வேலை, ஒரு நம்பிக்கையா இருந்துச்சு. இப்போ அந்த நம்பிக்கை என்ன ஆகும்னு தெரியலை” என்றார் வேதனையுடன்.
கரூரைச் சேர்ந்த ஜெயஸ்ரீயிடம் பேசினோம்.“என் பேரன் துருவிஷ்ணுவை இழந்த பிறகு, என் மகன் விமல் மனமுடைஞ்சு நடைப்பிணம்போல வாழ்ந்துக்கிட்டு இருந்தான். நான் வீட்டு வேலைக்குப் போய் கிடைக்கிற சொற்ப வருமானத்துலதான் குடும்பத்தை நடத்திட்டுவந்தோம். கரூர் கலெக்டர் ஆபீஸ்ல என் மகனுக்கு வேலை கிடைச்சப்ப, எங்க குடும்பம் மீண்டும் நிமிர்ந்துடும்னு நம்பிக்கையா இருந்தேன். ஏற்கெனவே பேரனை இழந்த ரணத்தோட வாழ்ந்துவரும் எங்க குடும்பத்தை, இந்த நீதிமன்ற உத்தரவு இன்னும் காயப்படுத்திடுச்சு” என்றார்.
சட்ட நியாயம் ஒருபுறமும், மனிதநேய எதிர்பார்ப்பு மற்றொரு புறமுமாக சிக்கித் தவிக்கின்றன கரூரில் உயிர் இழந்தோரின் குடும்பங்கள்.