DC OTT: ரூ.100 கோடி வசூல் வேட்டை.. லோகேஷ் கனகராஜின் 'டிசி' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், முதன்முறையாக கதாநாயகனாக களமிறங்கி மாஸ் காட்டிய திரைப்படம் 'டிசி' (DC). இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், கலாநிதி மாறனின் 'சன் பிக்சர்ஸ்' தயாரிப்பில் உருவான இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.
டிசி கதைக்களம்: காவல்துறையின் ஆயுதங்களைத் திருடியது மற்றும் காவல் அதிகாரியைக் கொலை செய்த குற்றத்திற்காகத் தாஸ் (லோகேஷ் கனகராஜ்) மற்றும் அவரது கூட்டாளிகளை போலீஸ் தேடுவதால், அனைவரும் சென்னையில் உள்ள ஒரு விடுதிக்கு தப்பி வருகின்றனர். அந்த விடுதியில் பார்வதியை (சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி) தாஸ் சந்திக்கிறார். பார்த்த நொடியிலேயே அவள் மீது இனம் புரியாத ஒரு பாசம் பிறக்கிறது. ஆனால், எதிர்பாராத திருப்பங்களால் பார்வதி தாஸின் வாழ்க்கையை விட்டுப் பிரிய நேரிடுகிறது. அதன்பின் வெறியோடு இருக்கும் தாஸின் வாழ்க்கையில் பாலியல் தொழிலாளியான சந்திரா (வாமிகா கபி) வருகிறார்.
வன்முறை பூத்த காதல்: வழக்கமான காதல் வசனங்களோ, இச்சையோ இல்லாமல் முற்றிலும் வித்தியாசமான வன்முறை கலந்த தீவிர காதல் கதையாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. தனது முதல் படத்திலேயே நடிகராக முத்திரை பதித்துள்ள லோகேஷ் கனகராஜின் நடிப்புக்கும், ராக்ஸ்டார் அனிருத்தின் மிரட்டலான பின்னணி இசைக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'டிசி' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 101.45 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்துள்ளது.
ஓடிடி ரிலீஸ்: திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வசூலில் சாதனை படைத்த இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 4ஆம் தேதி முதல் Sun NXT மற்றும் Amazon Prime Video ஆகிய ஓடிடி தளங்களில் 'டிசி' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. திரையரங்குகளில் இப்படத்தை தவறவிட்ட ரசிகர்கள் தற்போது ஓடிடியில் இந்த படத்தை பார்த்து ரசிக்கலாம்