ஃபீல் குட் படம்னு பார்த்தா.. ஃபீல் குட் சீரியலா இருக்கு.. ஹாய் படத்தை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், நயன்தாரா,கவின், பிரபு, VTV கணேஷ், சத்யன், ஆதித்யா, காதர், காவ்யா, அறிவுமணி உள்ளிட்ட நடித்துள்ள படம் ஹாய். திரையரங்குகளில் படம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், வழக்கம் போல் தனது காரசாரமான பாணியில் 'ஹாய்' திரைப்படத்தை விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார் பிரபல திரைவிமர்சகர் ப்ளூ சட்டை மாறன்.
ஹாய் கதை: படத்தில் ஹீரோவான கவினுக்கு காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என கொள்கையில் உறுதியாக இருக்கிறார். இதனால், அவருடைய திருமணம் தள்ளிப்போகிறது. கவின் மிகவும் வெகுளியானவர் என்பதால், யாராவது அவரிடம் ஏதாவது சொல்லிவிட்டால், அதையே மனதில் வைத்துக்கொண்டு அதன்படி நடந்துகொள்வார். இப்படிப்பட்ட கேரக்டரை எந்த பெண்ணுக்கும் பிடிக்கவில்லை. அதனால் அவருக்கு திருமணமே நடக்காமல் போகிறது. ஒரு கட்டத்தில் பிரச்சனை பெரிதாகிவிட வீட்டை வெளியேறி சென்னைக்கு வந்துவிடுகிறார்.
சுவாரசியம் இல்லை: அதே நேரத்தில் ஹீரோயின் நயன்தாராவிற்கும் விருப்பமில்லாமல் ஒருவருடன் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்கிறார்கள். இதனால் வீட்டை விட்டு நயன்தாரா சென்னைக்கு விடுகிறார். இப்படித்தான் கவின், நயன்தாரா இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள். அதன் பிறகு இருவரும் எப்படி சேர்ந்தார்கள் என்பதுதான் படத்தின் கதை. ஆனால், படம் ஆரம்பிக்கும்போதே கடைசியில் இருவரும் சேர்ந்துவிடுவார்கள் என்பது தெரிந்துவிடுகிறது. அப்படியிருக்கும்போது, அவர்கள் இருவரும் எப்படி சந்தித்தார்கள், எப்படி காதலித்தார்கள், எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதில்தான் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், படத்தில் எப்படி எந்த சுவாரஸ்யமான விஷமும் இல்லை.
நாடகத்தனமாக இருக்கு: முதல் பாதி கூட ஓரளவுக்கு பரவாயில்லை. ஆனால், இரண்டாம் பாதியில் கதை ரொம்பவே நாடகத்தனமாக இருக்கு. ஒரு கட்டத்திற்கு மேல் கதை நகராமல் சீரியல் பார்ப்பது போல இருந்தது. ஒரு பெண் ஊரிலிருந்து ஓடி வந்தால், சென்னையில் அவருடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இயல்பாக காட்டியிருக்க வேண்டும். ஏதாவது ஒரு வேலை செய்து, கஷ்டப்பட்டு, சாப்பாட்டுக்காக போராடி, ஒரு சிறிய இடத்தில் தங்கி வாழ்வது போன்ற விஷயங்களை காட்டியிருக்கலாம். ஆனால் படத்தில் அப்படி காட்டாமல் நாடகத்தனமாக இருக்கிறது.
பீல் குட் சீரியல்: அதுமட்டுமில்லை, கவின், நயன்தாராவை ஹீரோ, ஹீரோயினை யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை. அக்கா, தம்பி மாதிரி தான் தெரிகிறது. இதுபோன்ற படங்களை காப்பாற்றுவது கதை, காமெடி, பாடல்கள் தான் ஆனால், அதுவும் இந்த படத்தில் கைகொடுக்கவில்லை. இந்த படத்தை ஒரு பீல் குட் திரைப்படமாக இருக்கும் என்று பார்த்தா, படம் பீல் குட் சீரியலாக இருக்கிறது. இந்தப் படத்தை போய் பாருங்க என்று சொல்ல முடியாது. தப்பித் தவறி போய்ட்டீங்கனா ஒன்றும் பெரிய தப்பில்லை என ப்ளூ சட்டை மாறன் ஹாய் படம் குறித்து பேசி உள்ளார்.