Dorothy First Review
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் டோரதி. இதில் கீர்த்தி சுரேஷ் லீடு ரோலில் நடித்திருக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் கார்த்திக்கிற்கு பத்தாவது படமாகும். இந்நிலையில் இந்திய அளவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் படத்தை பார்த்துவிட்டு தனது முதல் விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்.
நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சியின் மூலம் அடையாளப்பட்டவர் கார்த்திக் சுப்புராஜ். அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அவர் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசனை வைத்து பீட்சா என்ற படத்தை இயக்கினார். பேய் பட ஜானரில் வித்தியாசம் காண்பித்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டாகி முதல் படத்திலேயே பலரது கவனத்தை கார்த்திக் பக்கம் திருப்பியது.
ஜிகர்தண்டா: அதனைத் தொடர்ந்து சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோரை வைத்து ஜிகர்தண்டா படத்தை இயக்கினார். மதுரையை கதைக்களமாக வைத்து தனது ஸ்டைலில் படத்தை கொடுத்திருந்தார். அந்தப் படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி கார்த்திக் சுப்புராஜை ட்ரெண்டாக்கியது. இரண்டே படங்களில் கோலிவுட்டின் தவிர்க்க முடியாத தனித்துவமான இயக்குநராகிவிட்டார் அவர்.
ஜிகர்தண்டா 2 சம்பவம்: உச்சக்கட்டமாக ரஜினிகாந்த்தை வைத்து பேட்ட படத்தை இயக்கினார். ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் பார்த்து பார்த்து பேட்ட படத்தை செதுக்கியிருந்தார். குறிப்பாக சிறு வயதில் தான் பார்த்து ரசித்த ரஜினிகாந்துக்கு ஒவ்வொரு ஃப்ரேமையும் அவ்வளவு அழகாக வைத்திருந்தார். இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து அவர் இயக்கிய மெர்க்குரி ஃப்ளாப்பானது. ஜிகர்தண்டா 2 படத்தை இயக்கியிருந்தார். அது மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.
டோரதி: ஆனால் சூர்யாவுடன் ரொம்பவே எதிர்பார்ப்போடு சேர்ந்த ரெட்ரோ திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது. இருப்பினும், இன்னும் சில வருடங்கள் கழித்து அந்தப் படம் கொண்டாடப்படும் என்பது கார்த்திக்கின் ஆணித்தரமான நம்பிக்கை. இப்போது அவர் கீர்த்தி சுரேஷை வைத்து டோரதி படத்தை இயக்கியிருக்கிறார். அந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். கார்த்திக்குடன் இளையராஜா இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக தரமான செய்கைகளை இப்படமும் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டோரதி முதல் விமர்சனம்: இந்நிலையில் டோரதி படத்தை பார்த்த இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது முதல் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். அவர் படம் குறித்து கூறுகையில், "இதுவரை வந்ததிலேயே கார்த்திக் சுப்புராஜின் துணிச்சலான மற்றும் சிறந்த படைப்பு இது. மிகவும் ஆச்சரியமாக, இனிமையாக, அதிர்ச்சியளிக்கும் வகையிலும் இருக்கிறது. அடுத்தது என்ன நடக்கப்போகிறது என்பதை உங்களால் முன்கூட்டியே கணிக்க முடியாது" என்றார். இந்த முதல் விமர்சனத்துக்கு கார்த்திக் சுப்புராஜ் நன்றியும் தெரிவித்திருக்கிறார்.