IND vs SL: இந்தியாவுக்கு எதிராக மாபெரும் சாதனை படைத்த இலங்கை வீரர் சோனல் தினுஷா
IND vs SL: இந்தியாவுக்கு எதிராக மாபெரும் சாதனை படைத்த இலங்கை வீரர் சோனல் தினுஷா
கொழும்பு: இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சோனல் தினுஷா அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். இதன் மூலம், ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்டரான ஆண்டி பிளவரின் 26 ஆண்டுகால சாதனை ஒன்றை அவர் சமன் செய்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 103 ரன்கள் எடுத்திருந்த தினுசா, 2வது இன்னிங்சில் அரைசதம் கடந்து இந்த மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்கு இன்னிங்ஸ்களிலும் 50-க்கும் மேல் ரன்கள் குவித்த உலகின் இரண்டாவது பேட்டர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
காலே சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 100 மற்றும் 84 ரன்கள் எடுத்த இவர், அதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்டிலும் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.கடந்த 2000ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே இடையே நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஜிம்பாப்வேயின் ஆண்டி பிளவர் டெல்லி டெஸ்டில் 183* மற்றும் 70 ரன்களும், நாக்பூர் டெஸ்டில் 55 மற்றும் 232* ரன்களும் விளாசி இந்தச் சாதனையைப் படைத்தார்.
தற்போது சோனல் தினுசா காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 100 மற்றும் 84 ரன்களும், கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் 103 மற்றும் 88* ரன்களும் குவித்து இச்சாதனையைச் சமன் செய்துள்ளார்.
இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்கு இன்னிங்ஸ்களிலும் 50-க்கும் மேல் ரன்களைக் குவித்த மூன்றாவது இலங்கை பேட்டர் என்ற பெருமையையும் சோனல் தினுஷா பெற்றுள்ளார். இதற்கு முன்பு குமார் சங்கக்காரா மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் மட்டுமே இந்தச் சாதனையைப் படைத்திருந்தனர்.
இதே போன்று இந்தியாவுக்கு எதிரான தனது முதல் நான்கு டெஸ்ட் இன்னிங்ஸ்களிலும் 50-க்கும் மேல் ரன்கள் எடுத்த முதல் ஆசிய பேட்டர் என்ற தனித்துவமான பெருமையையும் தினுஷாவின் இந்த அரைசதம் பெற்றுத் தந்துள்ளது. இதற்கு முன்பு, இரண்டு இங்கிலாந்து மற்றும் இரண்டு வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள் மட்டுமே இந்தியாவிற்கு எதிராகத் தங்கள் முதல் நான்கு டெஸ்ட் இன்னிங்ஸ்களிலும் 50-க்கும் மேல் ரன்களைக் குவித்திருந்தனர்.
மேலும், இந்தியாவிற்கு எதிரான தனது முதல் மூன்று டெஸ்ட் இன்னிங்ஸ்களிலும் 80 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த டெஸ்ட் வரலாற்றின் மூன்றாவது பேட்டராகவும் சோனல் தினுசா திகழ்கிறார். இதற்கு முன்பு எவர்டன் வீக்ஸ் மற்றும் ஜாகீர் அப்பாஸ் ஆகியோர் மட்டுமே இந்தச் சாதனைப் பட்டியலில் இடம் பிடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.