📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 05, 2026 10:00 AM

இன்னும் கிடைக்காத எஸ்.சி.இ.ஆர்.டி. தமிழ் பாடப் புத்தகங்கள்: சி.பி.எஸ்.இ. ஆரம்பப் பள்ளி மாணவர்கள் தவிப்பு

இன்னும் கிடைக்காத எஸ்.சி.இ.ஆர்.டி. தமிழ் பாடப் புத்தகங்கள்: சி.பி.எஸ்.இ. ஆரம்பப் பள்ளி மாணவர்கள் தவிப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நேற்று (ஜூன் 4) மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், பல பள்ளிகளில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்னும் புதிய தமிழ் பாடப்புத்தகங்கள் கிடைக்கவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழிப் பாடத்திற்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) தயாரிக்கும் பாடப்புத்தகங்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டில் (2026-27), தொடக்கப் பள்ளிகளுக்கான (1 முதல் 3-ஆம் வகுப்புகள்) தமிழ் பாடத்திட்டத்தை எஸ்.சி.இ.ஆர்.டி. மாற்றியமைத்து, புதிய பதிப்புகளை வெளியிட்டுள்ளது.

இருப்பினும், பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளான நேற்றைய தினம், பல பள்ளிகளில் இந்த புதிய புத்தகங்கள் மாணவர்களின் கைகளுக்கு வந்து சேரவில்லை.

இது குறித்து ஓஎம்ஆர் (OMR) பகுதியில் உள்ள ஒரு முன்னணி சிபிஎஸ்இ பள்ளியின் முதல்வர் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழிடம் கூறுகையில், "எங்கள் பள்ளிக்கு 3 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் புத்தகங்கள் வந்துவிட்டன. 1 மற்றும் 2-ஆம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் மட்டுமே இன்னும் வரவில்லை. அவை அடுத்த வாரத்திற்குள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.

மற்றொரு பள்ளியின் முதல்வர் பேசுகையில், "நாங்கள் கடந்த திங்கள்கிழமைதான் புத்தகங்களுக்கான ஆர்டரை சமர்ப்பித்தோம். இன்னும் அவற்றைச் சென்று வாங்க வேண்டியுள்ளது" என்று தெரிவித்தார். சில பள்ளிகள் உரிய நேரத்தில் புத்தகங்களுக்கான ஆர்டரை வழங்காததும் இந்த தாமதத்திற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த தாமதம் குறித்து முன்னாள் பள்ளி முதல்வர் வெங்கடேஸ்வரன் கூறுகையில், "புத்தகங்கள் வருவதில் மேலும் தாமதம் ஏற்பட்டால், ஆசிரியர்கள் வேறு வழியின்றி பழைய பாடத்திட்டத்தையே மீண்டும் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்" என்று கவலை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், விநியோகத்தில் உள்ள குறைபாடுகள் உடனடியாக சரிசெய்யப்படும். அனைத்து பள்ளிகளும் புதிய பாடப் புத்தகங்களின்படியே பாடம் நடத்த வேண்டும். சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு புதிய தமிழ் புத்தகங்கள் விரைவாகக் கிடைப்பதை அரசு உறுதி செய்யும்" என்று தெரிவித்தார்.