இது சர்க்காரா, சர்க்கஸ் கம்பெனியா? த.வெ.க., அரசை விமர்சித்த உதயநிதி
தஞ்சாவூர்: ''சர்க்கார் நடத்துகின்றனரா அல்லது சர்க்கஸ் கம்பெனி நடத்துகின்றனரா என கேட்கும் அளவுக்கு தான், த.வெ.க., அரசின் செயல்பாடுகள் உள்ளன,'' என, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடுமையாக விமர்சித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நேற்று நடந்த திருமண விழாவில் பங்கேற்ற உதயநிதி பேசியதாவது: கார் வேண்டாம் நான், கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம் பயந்தவன் கிடையாது. இதே தஞ்சாவூரில், விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தினேன். போராட்டத்தில், 'டம்மி' முதல்வர் என்றெல்லாம் விமர்சித்து பேசினேன்.
அப்போது அவர்களுக்கு கோபம் வரவில்லை. காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று சொன்னதும் கோபம் வந்து, என்னை கைது செய்தனர். அதனால், இந்த அரசு, நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டது. 'உதயநிதியை கைது செய்யவில்லை; விசாரித்ததும் விட்டு விடுகிறோம்' என, 'பல்டி' அடித்தது.
இந்த அரசால் அதிகம் பாதிக்கப்பட்டது விவசாயிகள் தான். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுக்கவும், பயிர்க்கடன் தள்ளுபடிக்கும் நிதி இல்லை என்று கூறுகிறார் முதல்வர் விஜய்.
ஆனால், எம்.எல்.ஏ.,க்களுக்கு கார் வாங்க மட்டும் எங்கிருந்து நிதி வந்தது? 'தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு கார் வேண்டாம்; விவசாயிகளின் பிரச்னையை தீர்த்து வையுங்கள்' என்று நாங்கள் கூறிவிட்டோம்.
முன்பெல்லாம் சட்டசபையில் கேள்வி கேட்டால் பதில் சொல்வர்; இப்போது பதில் சொல்லாமல் பாட்டு பாடுகின்றனர்.
'டம்மி' அரசு மக்கள் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை, சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்த கேள்விகளுக்கு, முதல்வர் பதில் சொல்வதில்லை; மூன்று அமைச்சர்கள் மட்டுமே பதிலளிக்கின்றனர்; அவர்களும் கேள்விகளுக்கு உரிய பதில் தராமல், ஏதேதோ பேசி திசை திருப்புகின்றனர்.
அமைச்சர்களும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களும், 'ரீல்ஸ்' எடுப்பதற்காகவே சட்டசபைக்கு வருகின்றனர். அவர்களுக்கு தேவையெல்லாம் ஒரு நாளைக்கு நான்கு ரீல்ஸ். இவர்கள் சர்க்கார் நடத்துகின்றனரா; சர்க்கஸ் கம்பெனி நடத்துகின்றனரா என்று கேட்கும் அளவுக்கு தான், இந்த அரசின் செயல்பாடுகள் உள்ளன.
தி.மு.க., ஆட்சியில், இந்தியாவிலேயே 'நம்பர் ஒன்' மாநிலமாக, 11.19 சதவீத வளர்ச்சியோடு தமிழகத்தை கொண்டு வந்தோம். இன்று அதை பாதாளத்தில் தள்ளிவிட்டனர். தமிழகத்தின் வளர்ச்சியை பின்நோக்கி தள்ளும் 'டம்மி' அரசாகவே, இந்த த.வெ.க., அரசு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
விழா மேடையில் உதயநிதி இருக்கும் போது, திருவையாறு தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரசேகரன் பேசியதாவது: தஞ்சாவூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கூட்டத்தில் இருந்த ஒருவர் கத்தியதையும், காவிரியில் தண்ணீர் திறப்பு பற்றி உதயநிதி பேசியதையும் தொடர்பு படுத்தி வழக்கு போட்டனர்.சட்டசபையில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போதும், போலீசார் அவரை வலுக்கட்டாயமாக கைது செய்து, செங்கிப்பட்டிக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.டெல்டா விவசாயிகளுக்காக உதயநிதி, இத்தனை கஷ்டங்களையும் ஏற்றுக் கொண்டார். மறுநாள் சட்டசபையில் முதல்வர் விஜய், எங்களுக்கு வணக்கம் வைத்தார். நாங்கள் யாரும் பதில் வணக்கம் வைக்கவில்லை. முதல்வர், 'மூடு அவுட்' ஆகிவிட்டார்.சட்டசபையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சிக்கும் விதமாக, அமைச்சர் நிர்மல்குமார் வார்த்தைகளை பிரயோகித்த போது, அவரது பாணியிலேயே உதயநிதி வெளுத்து வாங்கி விட்டார்கீர்த்தனா என்ற அமைச்சர் படுத்தும் பாடு பெரிய பாடாக இருக்கிறது. அவரை பார்த்தாலே கடுப்பாக இருக்கிறது. தி.மு.க., செய்ததை எல்லாம், அவர்கள் செய்ததாக சொல்கிறார். பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகனை எல்லாம், என்னால் தாங்க முடியவில்லை. அவ்வளவு 'டயலாக்' விடுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.சந்திரசேகரன் தனது பேச்சின்போது, முதல்வர் விஜய், அமைச்சர்கள் நிர்மல் குமார், கீர்த்தனா, ராஜ்மோகன் ஆகியோரை ஒருமையில் சுட்டிக்காட்டி விமர்சித்து பேசினார். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி இருந்த மேடையிலேயே, தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒருவர், முதல்வரையும், அமைச்சர்களையும் ஏக வசனத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.