📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 26, 2026 09:01 PM

ஜோகூரிலிருந்து 307 இந்தோனீசியர்கள் நாடுகடத்தப்பட்டனர்

ஜோகூரிலிருந்து 307 இந்தோனீசியர்கள் நாடுகடத்தப்பட்டனர்

ஜோகூர் பாரு: படகு இயந்திரக் கோளாற்றால் ஐந்து நாள்கள் கடலில் தத்தளித்த நான்கு மீனவர்கள், 10 வயது சிறுவன் உட்பட 307 இந்தோனீசியர்கள், ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதியன்று மலேசியாவின் ஜோகூர் மாநிலத்திலிருந்து இந்தோனீசியாவின் பாத்தாம் தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜோகூர் பாருவிலுள்ள இந்தோனீசியத் துணைத் தூதரகத்தின் உதவியுடன் மலேசியக் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட இந்த நடவடிக்கை, ஒரே நாளில் ஜோகூர் வழியாக மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய நாடுகடத்தல் நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

“திருப்பி அனுப்பப்பட்டவர்களில் 300 பேர் குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருந்தவர்கள் என்றும் எஞ்சிய ஏழு பேரில் அனாம்பாஸ் தீவைச் சேர்ந்த நான்கு மீனவர்கள், பாதுகாப்பற்ற நிலையில் இருந்த இரு வெளிநாட்டு ஊழியர்கள், 10 வயது சிறுவன் ஒருவன் அடங்குவர் என்றும் ஜோகூர் பாருவில் உள்ள இந்தோனீசியத் துணை தூதரகத்தின் அதிகாரி ஜாட்டி எச். வினார்த்தோ தெரிவித்தார்.

இவர்கள் ஸ்தூலாங் லாவோட், பாசிர் கூடாங் ஆகிய இடங்களிலிருந்து மூன்று படகுகள் மூலம் பாத்தாம் சென்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முகாம்களில் இருந்த 300 பேரில் 234 பேர் ஆண்கள், 66 பேர் பெண்கள்.

அனாம்பாஸ் தீவுகளின் ஆயர் சேனா கிராமத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதியன்று ‘கே.எம். சமுத்ரா ஜெயா மக்மூர்’ என்ற படகில் உயிருள்ள மீன்களைப் பாத்தாமிற்கு ஏற்றிச் சென்றபோது இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, மலேசிய கடற்பகுதிக்கு அடித்து வரப்பட்ட நான்கு மீனவர்கள் மலேசிய அதிகாரிகளால் மீட்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டவர்களில் அடங்குவர்.

மலேசியாவில் வேலை தேடும் இந்தோனீசியர்கள் சட்டவிரோத வழிகள், போலி வேலை வாய்ப்பு அறிவிப்புகள், இணையவழி மோசடிக் கும்பல்களால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வரும் சூழலில் இந்த நாடுகடத்தல் நடவடிக்கை நடந்துள்ளது. ரியாவ் பகுதியின் டுமாய், பெங்காலிஸ், செலாட் பஞ்சாங், ரியாவ் தீவுகளின் பாத்தாம், பிந்தான், கரிமுன் போன்ற பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாக ஆட்கள் கடத்தப்படுவதாகத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.