காமகோடியை விமர்சித்த பிரியங்காவிற்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு
புதுடில்லி: '' கல்வியாளர்களின் வாதங்களும், சான்றுகளும் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றாலும், அவர்களின் கல்விபுலத்தின் மதிப்பு குறைத்து மதிப்பிடக்கூடாது ,'' என்று காங்கிரஸ் எம்பி பிரியங்காவிற்கு கல்வியாளர்கள் 215 பேர் கடிதம் எழுதி உள்ளனர்.
மத்திய அரசு நடத்தும் தேர்வுகளை சீரமைப்பது தொடர்பாக இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நீலகேனி தலைமையில் குழு அமைக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். இந்தக்குழுவில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி இடம்பெற்றுள்ளார்.
ஆனால், லோக்சபாவில் காங்கிரஸ் எம்பி பிரியங்கா பேசும் போது, இந்தியாவில் தேர்வு முறையை சீர்திருத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் முன்னாள் உளவுத்துறை தலைவர், தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆகியோருடன் பசு கோமியம் நிபுணரும் இடம்பெற்றுள்ளார் என விமர்சித்துள்ளார்.சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடியை தான் அவர் இவ்வாறு சிறுமைப்படுத்தி பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியிருந்தது.
இந்நிலையில், கல்வியாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள் என பல்வேறு துறைகளை சேர்ந்த 215 பேர் பிரியங்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். அவர்கள் அனைவரும் அதில் கையெழுத்து போட்டு உள்ளனர்.
அந்தக் கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: சென்னை ஐஐடி இயக்குனர் வி.காமகோடியை பசு கோமியம் நிபுணர் என நீங்கள் விமர்சித்ததற்கு எங்களின் ஏமாற்றத்தை வெளிப்படுத்தவே இந்த கடிதத்தை எழுதுகிறோம். இது கிண்டலாக அல்லது அரசியல் சொல்லாடல் ஆக இருந்ததா என்பதைப் பொருட்படுத்தாமல், அத்தகைய சித்தரிப்பு ஒரு தனி நபரை பற்றியது என்பதால் கவலையை ஏற்படுத்துகிறது.
கல்வியாளரின் கருத்துகளை கலந்துரையாடுவதற்கு பதிலாக, ஒரு முத்திரை குத்தி நிராகரிப்பது என்பது, நமது அரசியல் அமைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கிய உரிமையை பாதிக்கும். நமது விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்கள், தாங்கள் நிராகரிப்பு என்ற முத்திரை குத்தப்படுவோம் என்ற பயமின்றி பொது விவாதத்தில் பங்கேற்க முடியுமா என தெரிந்து கொள்ள உரிமை உள்ளது.
இந்தியாவின் முன்னணியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராக காமகோடி உள்ளார். அவர் சென்னை ஐஐடியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் எம்எஸ் மற்றும் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 150க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 50க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்களில் பங்கெடுத்துள்ளார்.
டிஆர்டிஓவின் சிறந்த திறமைக்கான விருது மற்றும் இந்திய மின்னணுவியல் மற்றும் செமி கண்டக்டர்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் விருதுகளை பெற்றவர். இந்தியாவின் தொழில்துறை தரத்திலான மைக்ரோபிராசஸரை கண்டுபிடித்ததில் முக்கிய பங்காற்றியவர். அவர் நாட்டின் தலைசிறந்த மேதைகளில் ஒருவர்.
ஒரு காலத்தில் நம்ப முடியாதவை எனக் கருதப்பட்ட கருத்துகள் இறுதியில் அறிவியல் ரீதியான அங்கீகாரத்தை பெற்றன. அதேநேரத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல நம்பிக்கைகள் பின்னர் கைவிடப்பட்டன.
கல்வியாளர்களின் வாதங்களும், சான்றுகளும் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றாலும், அவர்களின் கல்விபுலத்தின் மதிப்பு குறைத்து மதிப்பிடக்கூடாது. ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடு இன்றியமையாதது. பகுத்தறிவுள்ள கலந்துரையாடலுக்கு கேலி ஒரு மாற்றாக அமையாது.
இவ்வாறு அவர்கள் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.