கனமழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு... கேரளத்தை உருக்குலைத்த மழை வெள்ளப் பிரளயம்...
கனமழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு... கேரளத்தை உருக்குலைத்த மழை வெள்ளப் பிரளயம்...
தெற்கு குஜராத்தில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தப் பகுதி காரணமாகத்தான் ஆகஸ்ட் 1-ம் தேதி கேரளத்தில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கிப் பலரும் இறந்துள்ளனர்.
ஒரே இரவில் இயற்கை எழுதிய அழிவின் அத்தியாயம், கேரளத்தை மீண்டும் சோகத்தின் பிடியில் தள்ளியிருக்கிறது. 2018 பெருவெள்ளத்தின் நினைவுகள் இன்னும் மறையாத நிலையில், இந்த மழை வெள்ளப் பிரளயம் கேரள மக்களின் வாழ்வில் மற்றோர் ஆழமான காயத்தைப் பதித்திருக்கிறது.
கேரளத்தில் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி அதிகாலை பெய்த பெருமழையால் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டன. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா மாவட்டங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை 350 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவானது. இதனால் ராணி நகரமே மூழ்கியது. இடுக்கி மாவட்டத்தில் சிறியதும் பெரியதுமாக 74 நிலச்சரிவுகள் நிகழ்ந்தன. இந்த இயற்கை இடரில் சிக்கி 15 பேர் மரணமடைந் திருக்கின்றனர். காயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கொல்லம், கண்ணூர், திருவனந்தபுரம் பகுதிகளில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற 3 பேர் உட்பட மாநிலம் முழுவதும் 6 பேர் மாயமாகி யிருக்கின்றனர். 30 வீடுகள் மண்ணோடு மண்ணாகப் புதையுண்டிருக்கின்றன. 293 வீடுகள் சேதமடைந்துள்ளன. 273 முகாம்களில், 7674 பேர் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். கோழிக்கோடு மாவட்டம், கோயிலாண்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை வீட்டு முற்றத்தில் தேங்கி நின்ற தண்ணீரில் தவறி விழுந்து மாஸின் என்ற 2 வயது குழந்தை இறந்தது. மலப்புரம் மாவட்டம், கொண்டோட்டியில் ஓடையில் மூழ்கி ஆதம் ஜமன் (4) என்ற சிறுவனும், அப்துல் முஹைன் என்ற இரண்டரை வயது குழந்தையும் உயிரிழந்தனர். கண்ணூர் காஞ்சிரப்புழா ஆற்றில் மிதந்து சென்ற தேங்காயை எடுப்பதற்கு முயன்ற வி.பி.ஹனீஃபா (46) என்பவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
ஆலப்புழா மாவட்டம் வழியாகப் பாயும் அச்சன்கோவில் ஆறும், பம்பா நதியும் கரைபுரண்டதால் குட்டநாடு, அப்பர் குட்டநாடு பகுதிகளின் வீடுகளில் மூன்றடிக்கு மேல் தண்ணீர் பெருகியது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் பம்பா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் ராணி நகரம் முழுவதுமாகத் தண்ணீரில் மூழ்கியது. ஓணம் பண்டிகை நெருங்குவதால் வியாபார நிறுவனங்களில் விற்பனைக்காக வாங்கி வைக்கப்பட்ட பொருள்கள் தண்ணீரில் மூழ்கி முற்றிலும் நாசமடைந்தன.
“2018-ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளப் பிரளயத்தின்போது ஏற்பட்ட நாச நஷ்டத்துக்கே அரசு இன்னும் நிவாரணம் வழங்கவில்லை. அதற்கிடையில் மீண்டும் ஒரு முறை இயற்கை எங்கள் வாழ்க்கையில் விளையாடிவிட்டது” என ராணியைச் சேர்ந்த வியாபாரிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
கோட்டயம் மாவட்டத்தில் மணிமலையாறு, மீனச்சல் ஆறு கரைபுரண்டதால் முண்டகாயம், ஈராட்டுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. அத்துடன் நிலச்சரிவும் உயிர்களைக் காவு வாங்கியது. கோட்டயம் பூஞ்ஞாறு பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு இரண்டு மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஜோனி என்பவருடைய வீடு முழுமையாக மண்ணுக்குள் புதைந்தது. அரை கிலோமீட்டருக்கும் மேலிருக்கும் உயரத்திலிருந்து உருண்டு வந்த பாறாங்கற்களும் மரங்களும் விழுந்ததில் வீடு முழுவதும் தகர்ந்தது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஜோனியின் மனைவி ரெஜினா (48), மகன் ஜோசபின் (28) ஆகியோர் மரணமடைந்தனர். ஜோனி, தன் உறவினர் ஒருவருக்குத் துணையாக அவரது வீட்டுக்கு இரவு தங்கச் சென்றதால் உயிர் தப்பினார்.
தனியார் இன்ஜினீயரிங் கல்லூரி கேன்டீனில் பணிபுரிந்துவந்த ஜோசபின், சில நாள்களுக்கு முன்பு பைக் விபத்தில் சிக்கி காலில் காயமடைந்த நிலையில், ஓய்வில் இருந்தார். இரவு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் உயிரோடு மண்ணில் புதைந்துள்ளனர். “ஜோசபினின் அப்பா ஜோனி, பள்ளி வாகனம் ஓட்டுநராக இருக்கிறார். மனைவி, மகனைப் பறிகொடுத்த அவர், கஷ்டப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய வீட்டையும் இழந்து நிற்கிறார்” என அந்தப் பகுதி மக்கள் சோகத்துடன் தெரிவிக்கின்றனர்.
இடுக்கி மாவட்டம், தொடுபுழா அடூர்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ரவி என்பவருடைய மனைவி சுமதி (69) மரணமடைந்தார். அவருடைய மகன் ரதீஷ் (38) படுகாயமடைந்த நிலையில் தொடுபுழா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். ரவி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். சுமதி வீட்டில் 3 நாய்களை வளர்த்து வந்தார். சுமதி மரணமடைந்ததை அறியாத நாய்கள் நிலச்சரிவில் உடைந்த வீட்டைச் சுற்றிச் சுற்றி வருவது அந்தப் பகுதியினரை துக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இயற்கை இடர்களிலிருந்து மீண்டும் கடவுளின் தேசம் கரைசேரட்டும்.