முஸ்லிம் சமூகத்தில் பங்காளித்துவங்களை ஆழப்படுத்த பிரதமர் ஊக்குவிப்பு
மலாய், முஸ்லிம் சிங்கப்பூரர்களில் கூடுதலானோர் சிறப்பாகச் செயல்பட்டு, மற்றவர்களுக்கு உதவ முன்வருவதால், எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையுடன் இருப்பதற்குக் காரணம் உள்ளதாக பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
பலருக்கு உதவியதோடு அவர்களையும் உதவ ஊக்கம் தந்த முஸ்லிம் நிபுணர்கள் சங்கம் (ஏஎம்பி), ‘எம்கியூப் பிளஸ்’ உள்ளிட்ட மலாய் முஸ்லிம் கட்டமைப்பு வழியாகப் பங்காளித்துவங்களை ஆழப்படுத்தவும் அவர் ஊக்குவித்தார்.
மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) நடைபெற்ற முஸ்லிம் நிபுணர்கள் சங்கத்தின் 35ஆம் ஆண்டுநிறைவு கொண்டாட்டத்தில் உரையாற்றிய திரு வோங் இவ்வாறு கூறினார்.
35 ஆண்டுகளுக்கு முன்பு இச்சங்கத்தைத் தொடங்கிய மலாய்,முஸ்லிம் நிபுணர்கள் குழு, சமூகத்தின் முன்னேற்றம் குறித்து அக்கறை கொண்டிருந்ததைப் பிரதமர் குறிப்பிட்டார்.
“என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி வெறுமனே பேசிக் கொண்டிருக்காமல், அவர்கள் களத்தில் இறங்கி வேலை செய்யத் தொடங்கினர். அவர்களின் முயற்சிகளுக்குப் பலன் கிடைத்துள்ளது,” என்று பிரதமர் பாராட்டினார்.
உதவி பெறும் தனிநபருக்கு மட்டுமல்லாமல், தலைமுறைகள் தாண்டியும் இந்த அமைப்பின் தாக்கம் தொடர்வதாகத் திரு வோங் தமது உரையில் குறிப்பிட்டார். சங்கத்தின் நிறுவன இயக்குநர்களான பேராசிரியர் ஹுசின் முத்தலிப், திரு அலாமி மூசா, திரு டார்க் சானி, டாக்டர் அகமது மகாத் உள்ளிட்ட முன்னோடிகள் நிகழ்ச்சிக்கு வந்ததைச் சுட்டிய திரு வோங், அவர் பங்களிப்புகள் நீடித்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதைக் குறிப்பிட்டார்.
2022-ஆம் ஆண்டு நடைப்பெற்ற இச்சங்கத்தினரின் தேசிய மாநாட்டில் உரையாற்றியதை நினைவுகூர்ந்த பிரதமர், மலாய்/முஸ்லிம் அமைப்புகளுடனான ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் அதிகமான நிபுணர்களை ஒன்றிணைக்கவும் ஊக்கப்படுத்தியதை நினைவுகூர்ந்தார்.
“இந்த இரண்டு முனைகளிலும் ஏஎம்பி நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது என்பதிலும், உங்கள் பணியின் தாக்கத்தை நீங்கள் விரிவுபடுத்தி வருகிறீர்கள் என்பதிலும் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார் அவர்.
இளைய உறுப்பினர்களைத் தொடர்ந்து வழிநடத்தி, அவர்களின் யோசனைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகளை வழங்கவும் தலைமைப் பொறுப்புகளை ஏற்க அவர்களை ஊக்குவிக்கவும் திரு வோங் அறிவுறுத்தினார்.
சிங்கப்பூரில் மலாய், இந்திய முஸ்லிம் சமூகங்களின் மேம்பாட்டிற்காக 2026-ஆம் ஆண்டில் விரிவு செய்யப்பட்ட திட்டமாக ‘எம்கியூப் பிளஸ்’ (M³+) உள்ளது. பாரம்பரிய மலாய்-முஸ்லிம் அமைப்புகளுடன், இந்திய முஸ்லிம் அமைப்புகள், இளையர் குழுக்கள் மற்றும் தன்னார்வலர்களையும் இத்திட்டம் ஒன்றிணைக்கிறது.
முன்னேற்றத்தின் விதைகள் தூவப்பட்டன
2040ஆம் ஆண்டுக்குள் முஸ்லிம் சமூகத்தின் மாதாந்திர இடைநிலைக் குடும்ப வருமானம் $30,000ஐ எட்ட வேண்டும் என்ற இலக்குடன் ‘புராஜெக்ட் 30கே’ எனும் புதிய திட்டத்தையும் சங்கத்தினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
தலைமுறைகள் தாண்டி சமூகத்தின் நிதி வலிமையை வளர்ப்பதற்கான ஒரு கூட்டு வளர்ச்சி இலக்கு இதுவென்று சங்கம், முன்னதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
அத்துடன், சிங்கப்பூர் முஸ்லிம் சமூகத்தின் பொருளிyal நலனையும் சமூக முன்னேற்றத்தையும் மேம்படுத்த அமைக்கப்பட்டுள்ள ‘பேஸ்’ (Pace) என்ற தளத்தின் வழியாக, வேலைவாய்ப்பு, தொழில் வழிகாட்டுதல் ஆகியவற்றை நாடுவோர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த வழிகாட்டிகளிடம் ஆலோசனை பெற முடியும் “இத்திட்டம், வருமானத்துடன் நின்றுவிடாமல், நன்னோக்கம், நற்பண்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் செல்வத்தைப் பெருக்குவதிலும் சொத்துகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துகிறது,” என்றது முஸ்லிம் நிபுணர்கள் சங்கம்.