📅 Sunday, 29 November 2026 IST | கார்த்திகை 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil November 27, 2026 07:01 PM

இந்திய வர்த்தகப் பிணைப்பில் பொறுமையே பலன் தரும்: டாக்டர் அனந்த நாகேஸ்வரன்

இந்திய வர்த்தகப் பிணைப்பில் பொறுமையே பலன் தரும்: டாக்டர் அனந்த நாகேஸ்வரன்

இந்தியாவின் பொருளியல் வளர்ச்சியில் பங்கேற்க விரும்பும் சிங்கப்பூர் நிறுவனங்கள், குறுகிய கால லாபத்தை மட்டும் பார்க்காமல் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்று இந்திய அரசாங்கத்தின் தலைமைப் பொருளியல் ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

‘ஆசிய எதிர்கால உச்சநிலை மாநாடு 2026’ல் பங்கேற்க சிங்கப்பூர் வந்திருந்த அவர், தமிழ் முரசு, தப்லா! ஊடகங்களுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் இருதரப்பு வணிக, சமூக உறவுகள் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

நடுத்தர வர்க்கச் சந்தையை எப்படி அணுகுவது எனும் கேள்விக்கு டாக்டர் அனந்த நாகேஸ்வரன் பதிலளித்தார்.

“28 மாநிலங்களையும் எட்டு ஒன்றிய ஆட்சிப்பகுதிகளையும் கொண்ட, பன்முகத்தன்மை வாய்ந்த இந்தியச் சந்தையைப் புரிந்துகொள்ள அவகாசம் தேவை. ஓரிரு ஆண்டுகளில் பலன் கிடைக்கவில்லை எனப் பின்வாங்காமல், நிலைத்து நின்ற முதலீட்டாளர்களுக்கு இந்தியா எப்போதும் சிறப்பான பலன்களையே வழங்கியுள்ளது,” என்றார் அவர்.

வளர்ச்சி என்பது பெருநகரங்களுக்கு அப்பால் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களுக்கும் பரவியுள்ளது. அதனால் தென்மாநிலங்களைத் தாண்டி வடகிழக்கு, மத்திய இந்திய மாநிலங்களிலும் சிங்கப்பூர் நிறுவனங்கள் கால்பதிக்க இதுவே சரியான தருணம் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்தியாவின் மக்கள்தொகையில் 10 விழுக்காட்டினர் தரமிக்க பொருள்களுக்குக் கூடுதல் விலைகொடுக்கத் தயாராக இருப்பதால், சிங்கப்பூர் வணிகச் சின்னங்கள் தங்களின் உயர்தர அடையாளத்தைத் தக்கவைத்துக்கொண்டே இந்தியச் சந்தையை வெல்ல முடியும் என்றும் அவர் சுட்டினார்.

உற்பத்தி, முதலீடு, நகர்ப்புறத் திட்டமிடல், மின்னணுவியல், வேதிப்பொருள் ஆகிய துறைகளில் சிங்கப்பூரின் அனுபவம் இந்தியாவிற்குப் பெரிதும் கைகொடுக்கும். இந்தியாவின் ‘கிஃப்ட் சிட்டி’ (GIFT City) நிதி நிலையமும் சிங்கப்பூரும் போட்டியாளர்களாக மட்டுமல்லாமல், ஒத்துழைப்புடன் செயல்படவும் பரந்த வாய்ப்புள்ளது.

குறிப்பாக, திறன் மேம்பாட்டிலும் பலதுறைத் தொழிற்கல்லூரிக் கட்டமைப்பிலும் அடைந்துள்ள வெற்றியைச் சிங்கப்பூர் இந்தியாவிற்குக் கொண்டுசெல்வதன்மூலம் இரு நாடுகளும் பயன்பெற முடியும் என்று டாக்டர் அனந்த நாகேஸ்வரன் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் பசுமை எரிசக்தியை அணுகும் இவ்வேளையில், அதன் உற்பத்தியில் இந்தியா முன்னேற்றம் கண்டுவருகிறது. இருதரப்புக்கும் இடையே கடலடிப் பசுமை மின்சார வழித்தடம் அமைப்பது பற்றிய சாத்தியம் இருக்கிறதா எனும் கேள்விக்கு, இந்த யோசனை வட்டார அளவில் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்தும் சிறந்த சிந்தனை என்றும் அவர் பாராட்டினார்.

இந்தியாவிற்கான சிங்கப்பூரின் ஏற்றுமதி தற்போது இருமடங்காகி இருக்கிறது. இந்நிலையில், சிங்கப்பூருக்கான இந்திய ஏற்றுமதியை உயர்த்தி, இருதரப்பு வர்த்தக ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும் வழிமுறைகள் குறித்த கேள்விக்கும் டாக்டர் அனந்த நாகேஸ்வரன் பதிலளித்தார்.

இந்தியாவின் பதப்படுத்தப்பட்ட வேளாண் பொருள்கள், மருந்துகள், மின்கருவிகள் போன்றவற்றை சிங்கப்பூர் அதிக அளவில் இறக்குமதி செய்ய முன்வரலாம் என்று அவர் ஆலோசனை வழங்கினார். அடுத்த ஆண்டு சிங்கப்பூர் ஆசியான் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருப்பது இந்தியா - ஆசியான் உறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சிங்கப்பூரை டாக்டர் அனந்த நாகேஸ்வரன் நன்கு அறிந்திருப்பது பற்றி அவரிடம் கேட்டபோது, 1999 முதல் 2021 வரை 22 ஆண்டுகள் சிங்கப்பூரில் வசித்ததைத் தமது வாழ்வின் இனிமையான காலகட்டமாக அவர் நினைவுகூர்ந்தார். சிங்கப்பூரில் வசித்த காலத்தில் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் (சிஃபாஸ்), சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) போன்ற அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியதையும் தம் மனைவி முன்னெடுத்த சமூக நலத் தொண்டுகளையும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

“என் பிள்ளைகளுக்குச் சிங்கப்பூர் முதல் வீடு, எனக்கு இரண்டாவது வீடு,” என்ற அவர், சிங்கப்பூர் இந்தியச் சமூகம் நவீன இந்தியாவிற்கும் நவீன சிங்கப்பூருக்கும் இடையே வலுவான பாலமாகத் திகழ்வதைப் பாராட்டினார்.