முதல்வர் விஜய்க்கு பாக்., இன்ப்ளூயன்ஸர்கள் ஆதரவு: மத்திய உளவுத்துறை தீவிர கண்காணிப்பு
சென்னை: பாகிஸ்தானை சேர்ந்த 'இன்ப்ளூயன்ஸர்கள்', தமிழக முதல்வர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து, சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்வது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வாயிலாக த.வெ.க., ஆட்சிக்கு வந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், 'முதல்வர் விஜய், பிரதமராகப் போகிறார்; தமிழகத்தை தலைகீழாக மாற்றி விட்டார்' என, வட மாநிலங்களில் உள்ள, 'இன்ப்ளூயன்ஸர்கள்' எனப்படும் சமூக வலைதள பிரபலங்கள் வீடியோ' வெளியிட்டனர்.
இதன் பின்னணியில், முதல்வர் விஜயின் தனிச்செயலர் ஜெகதீஷின் 'ரூட்' என்ற விளம்பர நிறுவனம் இருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தன. அதற்கு, அந்த நிறுவனம் தரப்பில், இதுவரை எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.
தற்போது, பாகிஸ்தானை சேர்ந்த 'இன்ப்ளூயன்ஸர்கள்', முதல்வர் விஜய் குறித்து பேசுவது, அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 'பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை பின்பற்றி, அரசியலுக்கு வந்ததாக, முதல்வர் விஜய் கூறியுள்ளார்' என, 'ஸ்க்ரோல் பாகிஸ்தான்' என்ற முகநுால் பக்கத்தில் பதிவிடப் பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள இடங்களின் முகவரி மற்றும் மொபைல் போன் எண்களை வைத்து, முதல்வர் விஜய் புகைப்படங்களுடன், ஏராளமான சமூக வலைதள கணக்குகளும், முகநுால் பக்கங்களும் புதிதாய் முளைத்திருக்கின்றன. இது குறித்து, தேசிய பாதுகாப்பு பிரிவுக்கு வந்த புகார்களை தொடர்ந்து, மத்திய உளவுத்துறை, கண்காணிக்க தொடங்கி உள்ளது.
உளவுத்துறை அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:
சமூக வலைதளங்களில், அதிக பார்வை, 'லைக்', பின் தொடர்பு போன்றவற்றுக்கு போலியான பக்கங்களை, தனியார் ஏஜென்சிகள் உருவாக்குகின்றன. பாகிஸ்தான் போன்ற நாடுகளில், இதற்கான செலவு மிகக்குறைவு. எனவே, பாகிஸ்தான் 'இன்ப்ளூயன்ஸர்கள்' வழியே, 'லைக்'கு களை ஏஜென்சிகள் அதிகம் பெறுகின்றன.
அந்த வகையில், முதல்வர் விஜய் பெயரில், பக்கம் தொடங்கினால், 'லைக்', பின் தொடர்வோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அதனால் தான், பாகிஸ்தானில், விஜய் பெயரில், கணக்குகள் தொடங்கப்படுகின்றன. ஆனால், இந்த விவகாரத்தை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.
பாகிஸ்தானை சேர்ந்த 'இன்ப்ளூயன்ஸர்களை, தமிழகத்தில் இருந்து நேரடியாக தொடர்பு கொள்வது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். குறிப்பாக, முதல்வர் விஜயை சுற்றியுள்ளவர்கள், இதில் நேரடியாக சம்பந்தப்பட்டு இருந்தால், நாட்டின் ரகசியங்கள் கசிய வாய்ப்பு இருக்கிறது. அரசின் மின் பொருட்கள் 'ஹேக்' செய்யப்படவும் வாய்ப்பு இருக்கிறது.
எனவே, வெறுமனே 'லைக்' பெற, முதல்வர் விஜய் பெயரை பயன்படுத்துகின்றனரா அல்லது இங்கிருப்போரின் நேரடி தொடர்பில், இவ்விஷயம் நடக்கிறதா என தீவிரமாக விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.