நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்படாததால் அவதி: மழையில் நனைந்து முளைக்கும் 10 ஆயிரம் நெல் மூட்டைகள்
காஞ்சிபுரம் மேல்பெரமநல்லூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட உள்ள இடத்தில் தேக்கி வைக்கப்பட்டு மழையில் நனைந்த நெல்மூட்டைகள்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததாலும், கொள்முதல் தாமதத்தாலும் அறுவடை செய்யப்பட்ட சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே உள்ள மேல்பெரமநல்லூர் உள்ளிட்ட தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஏற்கெனவே செயல்பட்ட இடத்தில் சுமார் 10,000 நெல் மூட்டைகள் அறுவடை முடிந்து கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்தன.
கடந்த ஒரு மாதமாக இந்த மூட்டைகள் தேக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து கொள்முதல் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (செப். 3) பெய்த கனமழையால் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் நீரில் நனைந்து பெரும் சேதமடைந்துள்ளன.
இதேபோல் சாலவாக்கம், கீழ்பெரமநல்லூர் ஆகிய கிராமங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை.
பெரும் நிதி இழப்பு இதனால் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் திறந்தவெளியில் குவித்து வைத்துள்ளனர்.
திறந்த வெளியில் கூரை வசதியின்றி வைக்கப்பட்டிருந்த நெல் மணிகள் தொடர்ந்து பெய்த மழையால் நனைந்து, தற்போது முளைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்களிடம் கேட்டபோது, ``மாவட்டம் முழுவதும் விவசாயிகளின் நலன் கருதி சுமார் 70 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இன்னும் ஒரு வார காலத்துக்குள் அனைத்து மையங்களும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு, நெல் கொள்முதல் துரிதப்படுத்தப்படும்'' எனத் தெரிவித்தனர்.