நெல் கொள்முதல் முறைகேடு வழக்கு: தமிழகத்தில் 11 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை
நெல் கொள்முதல் முறைகேடு வழக்கு: தமிழகத்தில் 11 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை
காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.
Published : November 25, 2026 at 2:15 PM IST
சென்னை: நெல் கொள்முதல் முறைகேடு வழக்கு தொடர்பாக தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களில் 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு, தனியார் அரிசி ஆலைகளுக்கு அனுப்பி அரிசியாக மாற்றப்படுகிறது.
பின்னர் இந்த அரிசி, நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு, ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக அரைக்கப்பட்ட அரிசியை தனியார் சந்தைகளுக்கு அனுப்பிவிட்டு, பழைய ரேஷன் அரிசியை நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளில் சேகரித்து வைத்திருப்பதாக புகார் எழுந்தது.
இதில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றிருப்பதாகவும் தகவல் வெளியானது. இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மொத்தம் 11 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒரே நேரத்தில் திடீர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த முறைகேடு வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படுவோரின் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே விசாரணையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சோதனை நிறைவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிற விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் தெரியவரும் என லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.