“நன்றிகெட்ட கூட்டம்”... காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கிய உதயநிதி ஸ்டாலின்
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக நிர்வாகிகளுக்கான நன்றி தெரிவித்தல் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
புதிய அரசு பொறுப்பேற்று 25 நாட்கள் ஆயிற்று; உருப்படியாக ஏதாவது ஒரு திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார்களா?. ஸ்டிக்கரை மாற்றி ஒட்டி, சிங்கப்பெண் என்ற திட்டத்தை கொண்டு வருவோம் என சொல்லி அதையும் கொண்டுவர வக்கில்லாத ஒரு சோபா மாடல் ஆட்சி தற்போதைய ஆட்சி.
முதல்-அமைச்சர் விஜய் கருப்பு கோட் போடுவது பெரியார் நினைவாக என்கிறார், இதைவிட பெரிய உருட்டு ஏதாவது இருக்கிறதா? கோட் சூட் போட்டதெல்லாம் பிரச்சினை கிடையாது. எல்லா விதத்திலும் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறீர்கள், அதுதான் பிரச்சினை. திருவள்ளுவருக்கு மீண்டும் காவிப் பூச ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், அதைப் பற்றி பேச வக்கில்லாமல் பயந்து இன்றைக்கு ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பது யார்?.
யாரு சட்டமன்ற உறுப்பினர் யாரு அமைச்சர்ன்னு முதலமைச்சருக்கே தெரியாத ஒரு ஆட்சி நடக்குது. த.வெ.க கவர்ச்சியில் வெற்றிபெறாமல், வேறு எதைவைத்து வெற்றிபெற்றது என இரண்டு காரணங்கள் சொல்ல முடியுமா? போராட்டம் செய்தீர்களா? சிறை சென்றிருக்கிறீர்களா? மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்திருக்கிறீர்களா? மக்களையாவது உருப்படியாக சந்தித்தீர்களா? உங்களது வேட்பாளர்கள் பெயராவது உங்களுக்கு தெரியுமா?.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கி சீர்கெட்டு இருப்பதைத் தட்டிக்கேட்டால், “ஆறு மாதங்கள் சும்மா இருப்போம்” என்றீர்களே என அழுது புலம்புகிறார் முதல்-அமைச்சர் விஜய். வாக்குறுதிகளை நிறைவேற்றதான் கால அவகாசமே தவிர, இதற்கு இல்லை.
தேர்தல் முடிவுகள் முழுமையாக வருவதற்குள் முன்னதாகவே நம்முடன் கூட்டணி வைத்திருந்த காங்கிரஸ் இயக்கம்; துரோக கூட்டம்; நம்ம பெயரை சொல்லி வாக்கு கேட்டு நன்றி கூட சொல்லாம போன நன்றிகெட்ட கூட்டம். இதை திமுகவினர் எப்போதும் மறக்கமாட்டோம்; தமிழ்நாட்டு மக்களும் மறக்க மாட்டார்கள்.
என்றைக்கும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, தி.மு.க.வின் கோட்டை என்பதை தொகுதி மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளீர்கள். என்றைக்கும் நான் உங்கள் வீட்டுப் பிள்ளையாகதான் இருப்பேன். இந்தத் தோல்வி நிரந்தரமல்ல! நிச்சயம் மீண்டும் வென்று காட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.