📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 11, 2026 11:03 PM

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு: ‘நார்வேக்கு அழியாத களங்கம்’ என ட்ரம்ப் விமர்சனம்

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு: ‘நார்வேக்கு அழியாத களங்கம்’ என ட்ரம்ப் விமர்சனம்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

நார்வே நோபல் குழு, அக்டோபர் 9-ம் தேதி ஆஸ்லோவில் அமைதிப் பரிசு வெற்றியாளரை அறிவித்தது. அப்போது இந்த விருதுக்கு தேர்வான நவநீதம் பிள்ளையைப் பாராட்டக் கூடியிருந்தவர்கள் கைதட்டினர். அப்போது அவர், “இன்னும் கொஞ்சம் கைதட்டினால், இந்தப் பரிசை ட்ரம்புடன் பகிர்ந்து கொள்வேன்” என்று நகைச்சுவையாகக் கூறினார்.

இந்தக் கிண்டல், கடந்த ஆண்டு அமைதிப் பரிசு பெற்ற வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தனது நோபல் தங்கப் பதக்கத்தை ட்ரம்புக்குப் பரிசளித்த நிகழ்வைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், அதே நாளில் நியூயார்க்கில் தனது ஆதரவாளர்களின் பேரணியில் பேசிய ட்ரம்ப், “இந்த நபரைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. இருந்தாலும் வாழ்த்துகள்” என்றார். தொடர்ந்து, “என்னால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அமெரிக்காவுக்கே அமைதிப் பரிசு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்கவில்லை” என்று அவர் கூறினார். நவநீதம் பிள்ளையைத் தேர்ந்தெடுத்தது “நார்வே நாட்டுக்கு அழியாத களங்கம்” எனக் குறிப்பிட்ட அவர், “ஜனநாயகத்துக்கு எதிரான, நாகரிகத்தின் எதிரிகளான ஒரு சில தீவிர சித்தாந்தவாதிகளால் நோபல் அமைதிப் பரிசு என்றென்றும் மதிப்பிழந்துவிட்டது” என்றும் ஆவேசமாகப் பேசினார்.

கடந்த 2025 ஜனவரியில் மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து, நோபல் அமைதிப் பரிசைப் பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தை ட்ரம்ப் மறைத்ததில்லை. ஆனால், ஈரானுக்கு எதிரான போர், கிரீன்லாந்து போன்ற பகுதிகளை இணைக்கும் விரிவாக்க ஆசை, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கடும் நடவடிக்கைகள், பன்னாட்டு அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவை அவரைப் பரிசுக்குத் தகுதியற்றவராக்கிவிட்டதாக, அறிவிப்புக்கு முன்பு ஆஸ்லோவில் கருத்துத் தெரிவித்த நிபுணர்கள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.