📅 Saturday, 29 August 2026 IST | ஆவணி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 29, 2026 12:03 AM

பிரதமர் ரேஸில் விஜய்.. கடுப்பான ராகுல்... கூட்டணியில் விரிசலா?

பிரதமர் ரேஸில் விஜய்.. கடுப்பான ராகுல்... கூட்டணியில் விரிசலா?

பிரதமர் ரேஸில் விஜய்.. கடுப்பான ராகுல்... கூட்டணியில் விரிசலா?

தமிழ்நாடு அரசியலில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள தவெக, அடுத்தகட்டமாக தேசிய அரசியலில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, 2029 மக்களவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் வகையில் அரசியல் வியூகம் வகுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரை தேசிய வெற்றி கழகம் என மாற்றுவது குறித்தும், நாடு முழுவதும் குறிப்பாக சுமார் 100 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுவது குறித்தும் கட்சிக்குள் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், தவெகவின் இந்த தேசிய அரசியல் நகர்வு, தமிழ்நாட்டில் அந்தக் கட்சி தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்து வரும் காங்கிரஸ் கட்சியிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தேசிய அரசியலில் காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கு மாற்றாக விஜய்யை முன்னிறுத்தும் நடவடிக்கையை காங்கிரஸ் மேலிடம் ஏற்காது என டெல்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான முழுப் பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆதரவைப் பெற்றுக்கொண்டே தேசிய அளவில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நிலைப்பாட்டுக்கு போட்டியாக விஜய்யை முன்னிறுத்துவது கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்த தொடங்கிவிட்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

மேலும், சமீபத்திய கருத்துக்கணிப்புகள் மற்றும் வடமாநிலங்களில் விஜய்க்கு ஆதரவாக மேற்கொள்ளப்படும் சமூக வலைதள பிரசாரங்கள் ஆகியவையும் காங்கிரஸ் தரப்பின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும், இதனால் ராகுல்காந்தி கடும் அப்செட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, விஜய்யை 2029-ல் பிரதமர் பதவிக்கான முக்கிய முகமாக முன்னிறுத்த வேண்டும் என்ற கருத்துகள் தவெக வட்டாரத்தில் வலுப்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், தேசிய அரசியலில் விஜய்யின் நிலைப்பாடு குறித்து காங்கிரஸ் மேலிடம் உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது.

ஒருவேளை காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் பெற்றால், சட்டப்பேரவையில் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இது தமிழ்நாடு அரசியலில் புதிய அரசியல் கணக்குகளுக்கும், கூட்டணிக்குள் மேலும் விரிசலுக்கும் வழிவகுக்கக்கூடும்.

இதனால், தமிழ்நாட்டில் ஆட்சியைத் தொடர்ந்து நடத்துவதா அல்லது 2029 மக்களவைத் தேர்தலை குறிவைத்து தேசிய அரசியலில் தீவிரமாக களமிறங்குவதா என்ற முக்கியமான அரசியல் சவால் விஜய் தலைமையிலான தவெகவுக்கு உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.