📅 Monday, 24 August 2026 IST | ஆவணி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 24, 2026 03:03 AM

பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் தவெக

பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் தவெக

- நமது நிருபர் -

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தினரின் பேச்சு, காங்கிரசார் மத்தியில் மனக்கசப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் வேட்பாளராக முதல்வர் விஜயை, த.வெ.க.,வினர் முன்னிறுத்திய விவகாரத்தில், இரு கட்சியினருக்கும் இடையே பூசல் தொடங்கி உள்ளது.

கடந்த 2024 லோக்சபா தேர்தலில், 39 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், டில்லி அரசியலில் தவிர்க்க முடியாத முகமாக மாறினார்.

'இண்டி' கூட்டணியில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை விட, ஸ்டாலின் முக்கியத்துவம் பெற்றார். தி.மு.க.,வின் ஆதிக்கத்தால், தமிழகத்தில் காங்கிரஸ் சிறிய கட்சியாக சுருங்கியது. இது, ராகுல் - ஸ்டாலின் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆண்டு, சட்டசபை தேர்தல் முடிந்ததும், தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறியது; த.வெ.க., ஆட்சி அமைக்க உதவியதுடன், தமிழக அமைச்சரவையிலும் இடம் பெற்றது.

இந்நிலையில், த.வெ.க., - காங்கிரஸ் இடையேயான இப்புதிய கூட்டணியிலும், பிரதமர் வேட்பாளர் யார் என்பது, புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளில், த.வெ.க., தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. அடுத்து, அக்கட்சி லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், வட மாநிலங்களில் கால் பதிக்க வியூகம் அமைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சமூக வலைதளங்கள் வழியே, வட மாநிலங்களில் விஜயை பிரபலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

ஊழலற்ற, மதச் சார்பற்ற இளைஞர்களை ஈர்க்கும் மாற்றுத் தலைவராக விஜய் முன்னிறுத்தப்படுகிறார். த.வெ.க., அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், 'இந்தியாவின்அடுத்த பிரதமர் விஜய்' என்றும் பேசத் தொடங்கி உள்ளனர்.

சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், ''தென் மாநிலங்களிலிருந்து பிரதமர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும்,'' என, முதல்வர் விஜயை மனதில் வைத்து பேசினார்.

விருதுநகரில் நடந்த த.வெ.க., ஆட்சியின், 100 நாள் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசுகையில், ''இன்றைய முதல்வர் விஜய் வருங்காலத்தில் பிரதமராவார். அதில், எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஒவ்வொரு வினாடியும், நாம் அனைவரும் அதை நோக்கி பயணிப்போம்,'' என்றார்.

அமைச்சர் ஸ்ரீநாத் பேசுகையில், ''முதல்வர் விஜய் எங்கே போனாலும், 'போகஸ்' இருக்கும்; டில்லி போனாலும், 'போகஸ்' இருக்கும். நாளை அந்த டில்லியே விஜயாகத்தான் இருக்கும்,'' என்றார்.

த.வெ.க., - எம்.எல்.ஏ., சீனிவாச சேதுபதி பேசுகையில், ''வரும் 2029 லோக்சபா தேர்தலில், முதல்வர் விஜயை பிரதமராக்க, மக்கள் தயாராகி விட்டனர். நம்மால் அது முடியும். அதை நோக்கியே நம் பயணம் இருக்கும்.

'' தமிழகம் மூன்று ஆண்டுகளில் நன்றாகி விடும். இந்தியாவை நல்ல நிலைமைக்கு கொண்டு செல்ல, விஜயால் தான் முடியும்,'' என்றார். இது, காங்கிரஸ் கட்சியினரிடம் மனக்கசப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் வேட்பாளராக ராகுலை காங்கிரசார் முன்னிறுத்தி வரும் நிலையில், அவருக்கு போட்டியாக விஜய் வருவதை அவர்கள் விரும்பவில்லை. பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில், இரு கட்சியினர் இடையே பூசல் துவங்கி உள்ளது.

இது குறித்து, கோவையில் செய்தியாளர்களிடம், காங்கிரஸ் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியதாவது: 'இண்டி' கூட்டணி என்பது, டில்லியில் மோடி, அமித் ஷாவை எதிர்த்து போராடும் எம்.பி.,க்கள் கொண்ட கட்சிகள் எல்லாம் சேர்ந்து அமைத்த கூட்டணி.

கடந்த மே 4ம் தேதிக்கு பின், அந்தக் கூட்டணியிலிருந்து தி.மு.க., வெளியேறி விட்டது. தற்போது, 23 கட்சிகள் கூட்டணியில் உள்ளன. த.வெ.க.,வுக்கு எம்.பி.,க்கள் வரும் போது, அக்கட்சியை கூட்டணிக்கு அழைப்போம்.

எம்.பி.,க்கள் இல்லாத கட்சிகளை அழைத்துக் கொண்டிருக்க முடியாது. முதல்வர் விஜயை பிரதமர் வேட்பாளராக, த.வெ.க.,வினர் முன்னிலைப்படுத்துகின்றனர் என்றால், அவர்கள் ரசிகர்கள் மனநிலையில் உள்ளனர்.

பிரதமராக ராகுலை, முதல்வர் விஜய் முன்மொழிய, லோக்சபா தேர்தல் வர வேண்டும். முதல்வர் விஜயை பொறுத்தவரை, அவருக்கு 106 இடங்கள் கிடைத்ததும், முதலில் அவர் அழைத்தது ராகுலைத் தான். அவர் முதல்வராவதற்கு ராகுலிடம் ஆதரவு கேட்டார்; அவரும் ஆதரவு அளித்தார்.

த.வெ.க.,வின் அமைச்சர்கள் அனைவருக்கும் அந்த உண்மை தெரியும். அவர்கள் எல்லாம் அமைச்சராக இருப்பதற்காக, காங்கிரஸ் கட்சியின் ஆதரவு முதலில் வந்தது.

இல்லையென்றால், அமித் ஷா எல்லா கதையையும் முடித்திருப்பார்; கட்சியை உடைத்து, பழனிசாமியை முதல்வராக்கி இருப்பார். முதல்வர் விஜய் சரியான நேரத்தில், சரியான முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி கூறுகையில், ''லோக்சபா தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன. அனுபவம் இல்லாத அரசு அமைந்துள்ளது; அவர்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும்; அவர்கள் அரசையும், கூட்டணியையும் நடத்த வேண்டும்.

''அப்படி இருக்கையில், பிரதமர் வேட்பாளரையும் அறிவிக்க வேண்டும் என அவர்களிடம் கூற முடியாது. ராகுல் மட்டுமே, 'இண்டி' கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக இருப்பார். அதில், மாற்றுக் கருத்து இல்லை,'' என்றார்.