பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யாத தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் கோஷம்
பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யாத தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் கோஷம்
திருவாரூர்,நவ.27: டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரியும், பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யாத தமிழக அரசை கண்டித்தும் திருவாரூர் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டம் துவங்கிய உடனே டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்,
நீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட நெற்பயர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கிட வேண்டும், கூட்டுறவு கடன்கள் அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்யாத தமிழக அரசை கண்டிப்பதுடன் உடனடியாக அனைத்து பயிர்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், நுகர்பொருள் வாணிப கழகத்தை கூட்டுறவு துறையுடன் இணைக்கும் முடிவினை கைவிட வேண்டும் மற்றும் தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பலரும் ஒன்று சேர்ந்து கோஷமிட்டனர். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.