📅 Friday, 27 November 2026 IST | கார்த்திகை 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports November 27, 2026 01:32 PM

7 வயது மூத்த இந்திய வீரரை திட்டிய ஹர்ஷித் ராணா.. பிசிசிஐ நடவடிக்கை வேண்டும் என வலுக்கும் கோரிக்கை

7 வயது மூத்த இந்திய வீரரை திட்டிய ஹர்ஷித் ராணா.. பிசிசிஐ நடவடிக்கை வேண்டும் என வலுக்கும் கோரிக்கை

7 வயது மூத்த இந்திய வீரரை திட்டிய ஹர்ஷித் ராணா.. பிசிசிஐ நடவடிக்கை வேண்டும் என வலுக்கும் கோரிக்கை

தோஹா: 2026 ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் அரையிறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியிடம் இந்தியா ஏ அணி படுதோல்வி அடைந்து வெளியேறிய நிலையில், இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவின் அநாகரிகமான செயல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பந்துவீச்சில் அதிக ரன்களை வாரி வழங்கியதோடு, சக இந்திய அணி வீரரான ஷாபாஸ் அகமதை மைதானத்திலேயே தகாத வார்த்தைகளால் திட்டி இருக்கிறார். அவரை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

இலங்கை அணி 318 ரன்கள் என்ற இலக்கை சேஸிங் செய்தபோது இந்த விவகாரம் நடந்தது. அப்போது ஹர்ஷித் ராணா பந்து வீசிக் கொண்டு இருந்தார். பவுண்டரி எல்லையில் பந்தை தடுத்த ஷாபாஸ் அகமது, உடனே பந்தை எடுத்து எறிந்தார். ஆனால், அவர் தாமதமாக பந்தை வீசியதாக கருதிய ஹர்ஷித் ராணா ஷாபாஸ் அகமதை நோக்கி கெட்ட வார்த்தைகளை கூறி தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.

தன்னை விட 7 வயது மூத்தவரான ஷாபாஸ் அகமதை ஹர்ஷித் ராணா எல்லைமீறி திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. சொந்த அணி வீரரிடமே திமிராக நடந்துகொள்ளும் ஹர்ஷித் ராணா மீது பிசிசிஐ கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தப் போட்டியில் ஹர்ஷித் ராணாவின் பந்துவீச்சும் படுமோசமாக அமைந்தது. 7 ஓவர்கள் வீசிய அவர் 61 ரன்களை வாரி வழங்கி வெறும் 1 விக்கெட்டை மட்டுமே எடுத்தார். 116 ரன்கள் குவித்த இலங்கை தொடக்க வீரர் லசித் குரூஸ்புல்லேவை மட்டுமே அவரால் வீழ்த்த முடிந்தது. இலங்கை பேட்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய அவர், ஓவருக்கு சராசரியாக 8.71 ரன்களை கொடுத்தார்.

இந்த தொடர் முழுவதும் 4 போட்டிகளில் விளையாடிய ஹர்ஷித் ராணா 8 விக்கெட்டுகளை வீழ்த்தி, 26 ஓவர்களில் 217 ரன்களை வாரி வழங்கியுள்ளார். நேபாளத்திற்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதை தவிர்த்து, மற்ற முக்கிய அணிகளுக்கு எதிராக ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்.

மேலும், இலங்கை ஏ அணிக்கு எதிராக 318 ரன்கள் குவித்தும் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து வெளியேற, ஹர்ஷித் ராணாவின் பந்துவீச்சு சொதப்பலும் அவரது தேவையற்ற ஆக்ரோஷமுமே முக்கிய காரணமாக அமைந்தது. இந்த அரையிறுதிப் போட்டியில் ஷாபாஸ் அகமது 48 பந்துகளில் 54 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.