தி.க இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி: வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம்
சென்னை: நீட் தேர்வை எதிர்த்து திராவிடர் கழகம் மாநில அளவில் நடத்தும் இருசக்கர வாகன பேரணிக்கு அந்தந்த மாவட்ட உள்ளூர் போலீஸார் அனுமதி வழங்கியுள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதால், வழக்கை முடித்துவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வை எதிர்த்தும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரியும் திராவிடர் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன பேரணி நடத்த போலீஸார் அனுமதி மறுத்ததை எதிர்த்து திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜரானார்.
போலீஸார் தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், நீட் தேர்வை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்படும் மாநில அளவிலான இருசக்கர வாகன பேரணிக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ளூர் போலீஸார் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்தார். அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.