திலக் வர்மா அரைசதம்: துலீப் டிராபி பைனலில்
சென்னை: துலீப் டிராபி பைனலில், கிழக்கு மண்டல அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் துலீப் டிராபி கிரிக்கெட் பைனல் (5 நாள்) நடக்கிறது. கிழக்கு, தெற்கு மண்டல அணிகள் விளையாடுகின்றன. இரண்டு நாள் முடிவில், கேப்டன் இஷான் கிஷான் (270) இரட்டை சதம் கைகொடுக்க, கிழக்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 708 ரன் எடுத்தது.
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. இஷான் கிஷானுக்குப் பதில், குமார் குஷாக்ரா விக்கெட் கீப்பராக செயல்பட்டார். தெற்கு மண்டல அணிக்கு நாராயண் ஜெகதீசன் ஜோடி (32), ரஷீத் (27) ஏமாற்றினர். தேவ்தத் படிக்கல் (62), முகேஷ் குமார் பந்தில் அவுட்டானார்.
திலக் அசத்தல்
ரவிச்சந்திரனை (23), முகமது ஷமி வெளியேற்றினார். கேப்டன் திலக் வர்மா அரைசதம் அடித்தார். நீண்ட நேரம் தாக்குப் பிடித்த ஷ்ரேயஸ் கோபால் 26 ரன்னில் (79 பந்து) கிளம்பினார். மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 242/6 ரன் எடுத்திருந்தது. கேப்டன் திலக் வர்மா (56), மிலிந்த் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.
முகமது ஷமி, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் சாய்த்தனர். கைவசம் 4 விக்கெட் மட்டும் மீதமுள்ள நிலையில், தெற்கு மண்டல அணி 466 ரன் பின்தங்கியுள்ளது.