📅 Sunday, 23 August 2026 IST | ஆவணி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 22, 2026 11:03 PM

ராஜஸ்தானில் 2,500 பள்ளிகள் சிதிலமடைந்தவை

ராஜஸ்தானில் 2,500 பள்ளிகள் சிதிலமடைந்தவை

புதுடெல்லி: ராஜஸ்தானின் அரசுப் பள்ளிகளில் 2,500 சிதலமடைந்தவை என்றும், 300 பள்ளிகள் கட்டிடங்களே இல்லாமல் உள்ளதாகவும் அரசு ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. கரப்பான் ஜனதா கட்சியின் (சிஜேபி) போராட்டத்தால் இந்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்புரா கன்வார்புரா எனும் கிராமத்தில் உள்ள பள்ளியை ஆய்வு செய்ய சிஜேபி குழு ஒன்று சமீபத்தில் சென்றது. அப்போது உள்ளூர் மக்களும், பாஜக தொண்டர்களும் அக்குழுவின் மீது கற்களை வீசினர். அவர்கள் சென்ற வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தும், பெண் ஊழியர்களை மோசமாக நடத்தியும் தாக்குதல் நடத்தினர்.

அந்தக் கிராமத்து பள்ளி ஓர் எருமை மாட்டுத் தொழுவத்தில் இயங்கி வந்தது. அதன் பழைய கட்டிடம் ஏற்கெனவே பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது. இந்தத் தகவலை சிஜேபி-யினர் வெளியே கொண்டு வர முயன்றதால் அவர்கள் தடுத்து விரட்டி அடிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ராஜஸ்தானில் உள்ள அரசுப் பள்ளிகளின் அவலநிலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ராஜஸ்தான் அரசு நடத்திய பள்ளிகள் குறித்த ஆய்வில், ஏராளமான பள்ளி கட்டடங்கள் பழுதடைந்த நிலையில் இருப்பதும், அவைகளை சரி செய்ய வேண்டிய தேவை இருப்பதும் தெரியவந்துள்ளது.

மாநில பட்ஜெட் ஆவணங்களின்படி, 2,500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன. 300 பள்ளிகளுக்குச் சொந்தமாக கட்டிடங்களே இல்லை. அரசு ஆவணங்களின்படி, சுமார் 2,500 பள்ளிகளைப் பழுதுபார்க்கவும் புதுப்பிக்கவும் ரூ.550 கோடி செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், சொந்தக் கட்டடங்கள் இல்லாத மற்றும் பழுதடைந்த நிலையில் உள்ள 300 பள்ளிகளைச் சீரமைக்க ரூ.450 கோடி செலவிடப்பட உள்ளது.

வரவிருக்கும் ஆண்டிற்கான பட்ஜெட்டில் பள்ளிகளின் நிலையை மேம்படுத்த அம்மாநில அரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இது குறித்து ராஜஸ்தான் மாநில ஆளும் பாஜக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முந்தைய அரசு, பள்ளி கட்டடங்களைப் புறக்கணித்ததே பல துரதிர்ஷ்டவசமான சம்பவங்களுக்குக் காரணம்.

அடுத்த ஆண்டு, சுமார் 2,500 மேற்பட்ட பள்ளிகளின் பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகளுக்கு ரூ.550 கோடி செலவிடப்படும். மேலும், சொந்தக் கட்டிடங்கள் இல்லாத அல்லது சிதிலமடைந்த நிலையில் உள்ள 300 பள்ளிகள் ரூ.450 கோடி செலவில் சீரமைக்கப்படும்.

அத்துடன், 1,500-க்கும் மேற்பட்ட புதிய வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் கணினி ஆய்வகங்களை அமைக்கத் தனியாக ரூ.200 கோடி செலவிடப்படும்.

பள்ளிகளில் கழிப்பறை வசதிகளை விரிவுபடுத்தவும், வருகைப் பதிவிற்காக முக அங்கீகாரக் கருவிகளை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது. முந்தைய காங்கிரஸின் அரசின் அலட்சியமே இவைகளுக்கு காரணம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்கள் மீதான தாக்குதலைத் தடுக்காமல் ராஜஸ்தான் போலீஸார் மவுனமாக பார்த்துக் கொண்டு இருந்ததாக சிஜேபி-யினர் குற்றம்சாட்டி உள்ளனர். தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை 48 மணி நேரத்துக்குள் கைது செய்யுமாறு அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இல்லையேனில், ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் நடத்த இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.