தங்கம் வென்றார் திலீப் காவிட்: காமன்வெல்த் விளையாட்டு பாரா தடகளத்தில்
கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டு 'பாரா' தடகளத்தின் 100 மீ., ஓட்டத்தில் ('டி47') இந்தியாவின் திலீப் மஹாது காவிட் தங்கம் வென்றார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் நடக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான 'பாரா' தடகள போட்டிக்கான 100 மீ., ஓட்டத்தின் ('டி47') பைனலில் இந்தியா சார்பில் திலீப் மஹாது காவிட் 23, முகமது பாசில் 21, பங்கேற்றனர். கையில் குறைபாடு உள்ளவர்களுக்கான இப்போட்டியில், பந்தய துாரத்தை 10.71 வினாடியில் கடந்த திலீப் காவிட் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இது, இம்முறை இந்தியாவுக்கு கிடைத்த 3வது தங்கம். ஏற்கனவே மீராபாய் சானு (பளுதுாக்குதல்), ஷர்மிளா (குண்டு எறிதல்-எப்57) தங்கம் வென்றிருந்தனர்.
கேரளாவை சேர்ந்த முகமது பாசில், 10.83 வினாடியில் இலக்கை அடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்தியா சார்பில் முதல் முறையாக, காமன்வெல்த் விளையாட்டு 'பாரா' தடகளத்தின் ஒரு போட்டியில், முதலிரண்டு இடங்களை கைப்பற்றி சாதனை படைக்கப்பட்டது. இங்கிலாந்தின் கெவின் சான்டோஸ் (10.85 வினாடி) வெண்கலம் கைப்பற்றினார்.
பாராலிம்பிக்கில் பதக்கம்
மஹாராஷ்டிராவின் நாசிக் அருகே உள்ள டோரன் டோங்கரி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் திலீப் காவிட். தனது 6வது வயதில் மரத்தில் இருந்து கீழே விழுந்த இவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்படாததால், வலது முழங்கைக்கு கீழே அகற்றப்பட்டது. பின், ஓட்டப்பந்தயத்தில் கவனம் செலுத்திய காவிட், 2019ல் 'கேலோ இந்தியா யூத்' விளையாட்டின் 4X400 மீ., தொடர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றார். பின், 2022ல் நடந்த ஆசிய பாரா விளையாட்டில், 400 மீ., ஓட்டத்தில் தங்கத்தை கைப்பற்றினார். உலக பாரா சாம்பியன்ஷிப் போட்டியில் (2023) சிறப்பாக செயல்பட்ட இவர், பாரிஸ் பாராலிம்பிக்கில் (2024) விளையாட தகுதி பெற்றார். இதில் பைனல் வரை சென்று 8வது இடம் பிடித்தார். தற்போது காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்ற இவரது பார்வை, லாஸ் ஏஞ்சல்ஸ் பாராலிம்பிக் (2028) போட்டி மீது திரும்பி உள்ளது.
திலீப் காவிட் கூறுகையில், ''ஆசிய பாரா விளையாட்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் பாரலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு,'' என்றார்.
நீளம் தாண்டுதல்: ஸ்ரீசங்கர் 'வெள்ளி'
ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் பைனலில் இந்தியா சார்பில் முரளி ஸ்ரீசங்கர், கோகேஷ் சத்யநாதன் பங்கேற்றனர். இரண்டாவது வாய்ப்பில் அதிகபட்சமாக 8.09 மீ., தாண்டிய முரளி ஸ்ரீசங்கர், 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். இது, காமன்வெல்த் விளையாட்டில் இவரது 2வது வெள்ளி. ஏற்கனவே 2022ல் பர்மிங்காமில் நடந்த போட்டியில் வெள்ளி வென்றிருந்தார். இதன்மூலம் காமன்வெல்த் விளையாட்டு நீளம் தாண்டுதலில் தொடர்ச்சியாக 2 பதக்கம் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். இதற்கு முன் சுரேஷ் பாபு (1978, வெண்கலம்), அஞ்சு பாபி ஜார்ஜ் (2002, வெண்கலம்), பிரஜுஷா (2010, வெள்ளி) தலா ஒரு பதக்கம் வென்றிருந்தனர்.
மற்றொரு இந்திய வீரர் லோகேஷ் (7.97 மீ.,) 5வது இடம் பிடித்தார். ஜமைக்காவின் தாஜே கெய்ல் (8.15 மீ.,) தங்கத்தை தட்டிச் சென்றார்.
ஸ்ரீசங்கர் மகிழ்ச்சி
கேரளாவை சேர்ந்த நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கர் 27. ஆசிய விளையாட்டு (2022), காமன்வெல்த் விளையாட்டில் (2022) வெள்ளி வென்ற இவர், 2024ல் முழங்கால் காயத்துக்கு 'ஆப்பரேஷன்' செய்து கொண்டார். இதனால் போட்டியில் பங்கேற்க முடியுமா என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். காயத்தில் இருந்து மீண்ட இவர், காமன்வெல்த் விளையாட்டில் தனது 2வது பதக்கத்தை கைப்பற்றினார்.
முரளி ஸ்ரீசங்கர் கூறுகையில், ''இரண்டு ஆண்டுகளுக்கு முன், இப்போட்டியில் பங்கேற்பது சந்தேகமாக இருந்தது. தற்போது இந்தியாவுக்காக பதக்கம் வென்றதில் மகிழ்ச்சி. இம்முறை தங்கம் வெல்ல முயற்சித்தேன். இருப்பினும் எனது செயல்பாடு திருப்தி அளித்தது,'' என்றார்.