“தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிக்க திமுக மீண்டும் முயல வேண்டும்”
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.
கோவை: “தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிக்க கடந்த முறை எடுத்த முயற்சியை திமுக மீண்டும் எடுக்க வேண்டும்” என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் இருந்து இன்று (நவ.27) விமானம் மூலம் கோவை வந்த விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவை நிறைவேற்ற பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. டிச.3-ம் தேதி வரை நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்த மசோதாவைக் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.
திமுக இந்திய அளவில் பல்வேறு முக்கியப் பிரச்சினைகளில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. கடந்த முறை இந்த மசோதாவுக்கு எதிராக திமுக முன்னின்று செயல்பட்டது. அந்த மசோதா தோல்வியடைவதற்கு திமுக எடுத்த முயற்சியும் முக்கியக் காரணமாக இருந்தது.
எனவே, இந்த முறையும் தொகுதி மறுவரையறை மசோதா வெற்றி பெற்றுவிடக் கூடாது. அதனைத் தோற்கடிக்க திமுக கடந்த முறை எடுத்துக்கொண்ட முன்முயற்சியை மீண்டும் எடுக்க வேண்டும். திமுக இந்த மசோதாவுக்கு வாய்ப்பளிக்காது என்று நம்புகிறேன். இதுவே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இந்த மசோதா நிறைவேறினால் பல்வேறு இன்னல்களை நாடு சந்திக்க வேண்டியிருக்கும். குடியரசுத் தலைவர் ஆட்சி மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற திட்டங்களைக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
இதன் மூலம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் எண்ணங்கள் நிறைவேறிவிடும் அபாயம் உள்ளது. எனவே, இந்த மசோதாவைத் தேசியக் கண்ணோட்டத்துடன் அணுகி எதிர்க்க வேண்டும்.
தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாற்றமின்றி நிலைநிறுத்த வேண்டும். தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமல் இருப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும். தொகுதி மறுவரையறை என்பது நாட்டின் நலன் சார்ந்த முக்கியமான பிரச்சினையாகும். காங்கிரஸ் கட்சியின் பலவீனத்தைப் பயன்படுத்தி அதனை வீழ்த்த பாஜக முயற்சிக்கிறது.
காங்கிரஸ் மற்றும் அதன் தலைமையிலான இண்டியா கூட்டணி ஒற்றுமையாகச் செயல்பட்டால் சங்பரிவார் அமைப்புகளை வீழ்த்த முடியும்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தங்களது கருத்துகளைச் சுதந்திரமாக எடுத்துரைக்க முடியாத சூழல் நிலவுகிறது. நாடாளுமன்றத்தில் ஐந்து நிமிடங்கள் பேச மட்டுமே தற்போது வரை நிலைமை உள்ளது. ஐந்து மாநிலங்களில் வெற்றி பெற்றாலே தொடர்ந்து ஆட்சியில் இருக்கலாம் என்ற அரசியல் நோக்கத்துடன் பாஜக செயல்படுகிறது” என்று திருமாவளவன் கூறினார்.