📅 Sunday, 29 November 2026 IST | கார்த்திகை 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu November 29, 2026 04:01 AM

தொழுகை நடத்துவதை யாரும் தடுக்க முடியாது; மசூதிக்கு செல்ல பாஜ வேலூர் இப்ராஹிமுக்கு ஐகோர்ட் அனுமதி

தொழுகை நடத்துவதை யாரும் தடுக்க முடியாது; மசூதிக்கு செல்ல பாஜ வேலூர் இப்ராஹிமுக்கு ஐகோர்ட் அனுமதி

சென்னை: 'முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர், எந்த அரசியல் சார்புடையவராக இருந்தாலும், அவர் மசூதிகளில் தொழுகை நடத்துவதை தடுக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், பா.ஜ., சிறுபான்மையினர் அணி தேசியச் செயலர் வேலுார் இப்ராஹிம் தாக்கல் செய்த மனு: கடந்த அக்., 23ல், சேலத்தில் உள்ள மசூதிக்கு தொழுகைக்கு சென்றேன். அப்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகி சையது மூசா உட்பட ஒரு சிலர், என்னை மசூதிக்குள் செல்ல விடாமல் தடுத்தனர். இதுகுறித்து, பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழகம் உட்பட நாடு முழுதும் உள்ள மசூதிக்கு சென்று, தொழுகை செய்ய அனுமதிக்க உத்தரவிட வேண்டும். அரசியலமைப்பு சட்டம் வழங்கிய, மத சுதந்திரத்துக்கான உரிமையை தடுப்பவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன் பிறப்பித்த உத்தரவு:

இஸ்லாத்தின் படி, யார் உண்மையான முஸ்லிம் என்பதை, எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவர் தான் முடிவு செய்வார்; மற்றவர்கள் அல்ல. இஸ்லாமியர்கள் தொழுகைக்காக மசூதிக்கு செல்லும் முன், அரசியல் கொள்கைகளை வாயிலுக்கு வெளியே விட்டு விட்டுச் செல்ல வேண்டும். வழிபாட்டு தலங்களுக்குள், அரசியல் சார்புகளுக்கு இடமளிக்கக் கூடாது.

மசூதிக்குள் தொழுகையை வழிநடத்தும் இமாம் மட்டுமே முன்வரிசையில் நிற்கிறார். மற்ற அனைத்து முஸ்லிம்களும், சமூக, பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல், தோளோடு தோள் சேர்ந்து நின்று தொழுகின்றனர். மத கோட்பாடுகளின்படி, மசூதிகள் அல்லாஹ்வுக்கு அர்ப்பணிக்கப் பட்டவை.

மனுதாரர் பாஜ, காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரா என்பது முக்கியமல்ல. அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான மசூதியில் ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைத் தொழுகை நடத்தவிடாமல் எவ்வாறு தடுக்க முடியும். மசூதியின் உரிமையாளர் அல்லாஹ் மட்டுமே. எனவே, மசூதியில் ஒரு முஸ்லிம் தொழுவதை, மற்றொரு இஸ்லாமியர் தடுக்க முடியாது. அவ்வாறு செய்ய மனிதர்களுக்கு அதிகாரம் இல்லை. ஒரு முஸ்லிமைத் தொழுகை நடத்தவிடாமல் தடுப்பது ஒரு பாவம்.

ஷரியத் சட்டத்தில் கூட ஒரு முஸ்லிம் மற்றொருவரை மசூதியில் தொழுகை நடத்துவதிலிருந்து விலக்கி வைக்க முடியாது என்றே கூறுகிறது. இந்த விவகாரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சினைக்கு போலீசார் தீர்வு காண வேண்டும்.

எனவே, இரு தரப்பினர் இடையே எழுந்த இப்பிரச்னைக்கு தீர்வு காண, காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரர் தொழுகை நடத்த மசூதிகளுக்கு சென்றால், அவருக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

வழிபாட்டுத் தலத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டதால், மசூதிக்கு வெளியே சாலையில் அமர்ந்து தொழுகை நடத்திப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய மனுதாரரின் செயலையும் நீதிபதி கண்டித்தார்.