📅 Friday, 27 November 2026 IST | கார்த்திகை 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics November 27, 2026 01:32 AM

துணைவேந்தர் நியமன விவகாரம்

துணைவேந்தர் நியமன விவகாரம்

துணைவேந்தர் நியமன விவகாரம் - முதலமைச்சர் விஜய்க்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் கடிதம்

பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படுவதிலும் தாமதம் ஏற்படுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தெரிவித்துள்ளார்.

Published : November 26, 2026 at 7:55 PM IST

சென்னை: தமிழகத்தில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களில், துணைவேந்தர் பணியிடங்களை நிரப்புவதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் நிலுவையில் உள்ள பட்டமளிப்பு விழாக்களை விரைந்து நடத்த முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, முதலமைச்சருக்கு நவம்பர் 25-ஆம் தேதி ஆளுநர் கடிதம் எழுதியுள்ளதாக ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், 'தமிழகத்தின் பல்வேறு மாநிலப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் நீண்ட காலமாகக் காலியாக இருப்பதால், பல்கலைக்கழகங்களின் அன்றாட நிர்வாகப் பணிகள் மற்றும் கல்விச் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன' என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படுவதிலும் தாமதம் ஏற்படுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தற்போது, மாநில பல்கலைக்கழகங்களின் நிர்வாக முடிவுகளை எடுக்க தமிழக அரசு அமைத்துள்ள ஒருங்கிணைப்புக் குழு நடைமுறையில் இருக்கிறது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் அன்றாட நிர்வாக மற்றும் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்த ஏற்பாடு போதுமானதாக இல்லை' என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

எனவே, 'சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகச் சட்டங்கள் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) விதிமுறைகளுக்கு உட்பட்டு, முழுநேர துணைவேந்தர்களை நியமிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

'சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட இடங்களில் நிலுவையில் உள்ள பட்டமளிப்பு விழாக்களை விரைந்து நடத்துவதற்கான பல்கலைக்கழகம் வாரியான அட்டவணையைத் தயாரிக்க வேண்டும்' எனும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

துணைவேந்தர் தேர்வுக்குழுவில் யாருக்கு இடம்?

துணைவேந்தர் தேர்வுக்கான தேடல் மற்றும் தேர்வுக் குழுவில் (Search-cum-Selection Committee) பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவரின் பிரதிநிதியைச் சேர்ப்பது தொடர்பாக, தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுவதாகக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், 2026 ஜனவரி 30-ஆம் தேதி, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார். இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், துணைவேந்தர் தேர்வுக் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி ஒருவர், பல்கலைக்கழக சிண்டிகேட் பிரதிநிதி ஒருவர், பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவரின் பிரதிநிதி ஒருவர் மற்றும் தமிழக அரசின் பிரதிநிதி ஒருவர் இடம்பெறலாம் என அவர் முன்மொழிந்துள்ளார். இவை சம்பந்தப்பட்ட சட்ட விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தேர்வு நடைமுறையை விரைவுபடுத்தப் பரிந்துரை

துணைவேந்தர் பதவிக்கான காலியிடம் ஏற்படுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே தேர்வு நடைமுறைகளைத் தொடங்க வேண்டும் என்றும், தேர்வுக் குழு அமைக்கப்பட்ட 15 நாட்களுக்குள் துணைவேந்தர் பதவிக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் ஆளுநர் பரிந்துரைத்துள்ளார்.

அறிவிப்பு வெளியிடப்பட்ட 2 மாதங்களுக்குள் விண்ணப்பங்களைப் பரிசீலித்து நேர்காணல்களை முடிக்க வேண்டும் என்றும், தகுதியான மூன்று பேரை ஒருமனதாகத் தேர்வு செய்து முன்னுரிமை வரிசையில் பரிந்துரைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசும், ஆளுநரும் பரஸ்பர ஆலோசனை மற்றும் ஒத்துழைப்புடன் இந்த விவகாரத்திற்குச் சட்ட ரீதியான, நீடித்த தீர்வைக் காண வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஆளுநர், நிலுவையில் உள்ள பட்டமளிப்பு விழாக்களை விரைந்து நடத்தவும் முதலமைச்சர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக நீடித்து வரும் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பதுடன், பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் மற்றும் கல்விச் செயல்பாடுகள் தடையின்றி நடைபெற வேண்டும் என்பதே இந்தக் கடிதத்தின் முக்கிய நோக்கம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், துணைவேந்தர் நியமனத்தில் அரசு மற்றும் ஆளுநர் மாளிகை இடையே மீண்டும் மோதல் போக்கு தொடங்கியுள்ளது. ஏனெனில், கடந்த காலங்களில் வலியுறுத்தியது போல், பல்கலைக்கழக மானிய குழு சார்பில் ஒருவர் நியமனம் செய்யப்பட வேண்டும் என ஆளுநர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.