📅 Sunday, 29 November 2026 IST | கார்த்திகை 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health November 29, 2026 01:00 AM

கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல்: பாதிப்புகளை அறிய 630 மாதிரிகள் ஆய்வு

கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல்: பாதிப்புகளை அறிய 630 மாதிரிகள் ஆய்வு

கோவை: சங்கனுார் நீரோடை அருகே இறந்து கிடந்த கொக்குகளில் ஒன்றுக்கு பறவை காய்ச்சல் உறுதியானதை அடுத்து, கோழிப்பண்ணைகளில் கால்நடை மருத்துவர்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடலுார் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பை தொடர்ந்து கோவையிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 18ம் தேதி சித்தாபுதுார் அடுத்த பி.கே.ஆர். நகரையொட்டிய சங்கனுார் நீரோடையில் 14 குளத்து கொக்குகள் இறந்து கிடந்தது அறிந்து வனத்துறையினரும், கால்நடை மருத்துவர்களும் ஆய்வு செய்தனர்.

பறவைகளின் மாதிரிகளை சோதனை செய்ததில் அவற்றில் ஒன்றுக்கு பறவை காய்ச்சல் உறுதியானது. இதையடுத்து, பாதிப்பு அதிகரித்துள்ளதா என்பதை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் உள்ள கோழிப்பண்ணைகளில் கால்நடை மருத்துவர்கள் குழு நேரடி ஆய்வு செய்துவருகிறது.

பண்ணைகளில் இதுவரை பறவை காய்ச்சல் பாதிப்புகள் இல்லை. கோழிகளுக்கு ஏதேனும் அசாதாரண இறப்போ அல்லது நோயோ ஏற்பட்டால் உடனடியாக தகவல் தருமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தவிர, கால்நடை உதவி மருத்துவர்கள் தங்கள் எல்லைக்குள் வலசை வரும் பறவைகளின் உடல்நிலையை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பதற்றம் வேண்டாம்!

‘‘அண்டைய மாநிலங்களில் இருந்து நோய் தொற்று பரவலை தடுக்க 12 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கோழிகள் ஏற்றிவரும் வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. தற்போது இறந்த குளத்து கொக்குகளானது வனப்பறவைகள். எனவே, மற்ற பறவைகள் வைத்திருப்பவர்கள் பதற்றப்பட வேண்டாம். பறவைகள் இறந்த இடத்தில் இருந்து 1 கி.மீ., துாரத்துக்கு கோழி பண்ணைகள் எதுவும் இல்லை.

மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் இதுவரை 630 மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்துவிட்டோம். பறவை காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை. மாநகராட்சி நிர்வாகத்திடமும் காய்ச்சல் பாதிப்புகள் குறித்து தகவல் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்,’’ என்கிறார், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சித்ரா.