டில்லியில் 2300 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு: அவசர ஆலோசனை கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு
புதுடில்லி: தலைநகர் டில்லியில் பன்றிக் காய்ச்சல் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2300 ஆக உயர்ந்துள்ளது. நிலைமையை ஆராய முதல்வர் ரேகா குப்தா அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
டில்லியில் கடந்த சில நாட்களாக பன்றிக்காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. தொடக்கத்தில் 100க்குள்ளாக இருந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர ஆரம்பித்தது. தற்போது வரை இன்புளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துவிட்டது.இதில் 2300 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதால், சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், நிலைமையை ஆராய உடனடியாக அவசர கூட்டத்திற்கு முதல்வர் ரேகா குப்தா அழைப்பு விடுத்துள்ளார். இந்த தகவலை சுகாதார அமைச்சர் பங்கஜ் சிங் வெளியிட்டு உள்ளார்.
அவர் கூறி உள்ளதாவது;
டில்லி முழுவதும் பன்றிக்காய்ச்சல் நோயாளிகளுக்கு என தனிமைப்படுத்துதல் வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.நோயாளிகளுக்கு படுக்கை மறுக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
யாரும் எவ்விதத்திலும் பயப்பட தேவையில்லை. நோயாளிகள் வருகின்றனர், சிகிச்சை பெற்று செல்கின்றனர். போதிய மருத்துவர்களும், மருந்துகளும் உள்ளன. நிலைமை கட்டுப்பாட்டில் இருக்கிறது. முதல்வர் அவசர ஆய்வுக் கூட்டத்தை ஆலோசனைக்காக கூட்டி இருக்கிறார். அனைத்தும் முழு கட்டுப்பாட்டில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.