📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 26, 2026 07:00 PM

Toxic Review: டாக்ஸிக் விமர்சனம்.. யஷ்ஷோட நடிப்பு எப்படி?.. கீது மோகன்தாஸ் சொன்னதை செஞ்சாரா?

Toxic Review: டாக்ஸிக் விமர்சனம்.. யஷ்ஷோட நடிப்பு எப்படி?.. கீது மோகன்தாஸ் சொன்னதை செஞ்சாரா?

சென்னை: கீது மோகன்தாஸ் சொன்ன அந்த ஒரு விஷயத்தை நம்பி தன்னை முழுவதுமாக இந்த படத்துக்காக யஷ் அர்பணித்த விதம் மலைக்க வைக்கிறது. ஆனால், அதே சமயம் யஷ்ஷுக்கு கொடுத்த வாக்குறுதியை திரையில் மெய்பித்தாரா கீது மோகன்தாஸ் என்பது தான் பெரிய கேள்விக்குறி.

கேவிஎன் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை யஷ் தனது தயாரிப்பு நிறுவனமான மான்ஸ்டர் மைண்ட் நிறுவனத்தை வைத்து தயாரித்துள்ளார். ஹாலிவுட் படங்களுக்கு நிகரான படமாக மிகவும் பிரம்மாண்ட புரொடக்‌ஷன் வேல்யூவுடன் ஒரு காட் ஃபாதர் ரேஞ்சுக்கு ஒரு கேங்ஸ்டர் படத்தைக் கொடுக்க படக்குழு உழைத்துள்ளது தெளிவாக தெரிகிறது.

கோட் படம் போல இருக்குமா? என டிரைலர் ரசிகர்களை குழப்பிய நிலையில், அந்நியன் படம் போல மாறிய இடத்தில் டாக்ஸிக் ரசிகர்களை கொண்டாட வைத்ததா? அல்லது தலைவலி தைலத்தை தேட வைத்ததா? என்கிற முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

டாக்ஸிக் கதை: கேஜிஎஃப் படத்தில் எப்படி ஒன்றுமே இல்லாத ஒரு சிறுவன் மிகப்பெரிய ராஜ்ஜியத்தை ஆளுகிறானோ அதே போல, அநாதைகளாக மாறிய நிலையில், தனது தம்பி ராயா (யஷ்) இந்த ஊரையே ஆள வேண்டும் என அவனது அக்கா கங்கா (நயன்தாரா) ஆசைப்படுகிறாள். இந்தியா சுதந்திரமான சமயத்துக்கு முன்பிருந்தே கோவாவில் கதை ஆரம்பித்து அடிக்கடி டைம் லைன் மாறிக்கொண்டே செல்கிறது.

சால்வடோர் (டாரல் டி சில்வா) எனும் மிகப்பெரிய கேங்ஸ்டரிடம் அவனது தம்பி ராயாவிடம் இருந்து காப்பாற்றச் சொல்லிக் கேட்க, கல்லறையில் ராயாவின் அசத்தல் என்ட்ரி சீன் உடன் யஷ் காருக்குள் மேட்டரை முடித்து விட்டு, அங்கே இருக்கும் ஆட்களையும் தீர்த்துக் கட்டுகிறார். கூடவே கங்கா நயன்தாராவும் சண்டைப் போட்டு எதிரிகளை பந்தாடுகிறார். ஆனால், சால்வடோர் உள்ளே புகுந்து ராயாவை கார்னர் செய்துவிட ராயாவை கொல்வதற்கு பதில், அவனது தம்பியை கொல்ல உதவி செய்கிறார்.

இதன் மூலம் ராயா சால்வடோருடன் இணைந்து அபின் கடத்தலில் ஈடுபடுகிறான். ராயா மற்றும் கங்கா உள்ளே வந்தது சால்வடோரின் மனைவிக்கு (ஹுமா குரேஷி) பிடிக்கவில்லை. போதா குறைக்கு சால்வடோர் தனது மகள் ரெபேக்காவை (தாரா சுதாரியா) ராயாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.

நல்லா போய்க் கொண்டிருந்த கதையில் சர்க்கஸ் காரியாக நாடியா (கியாரா அத்வானி) கோவாவுக்கு வருகிறார். அவரை பார்த்ததும் ராயாவுக்கு அவர் மீது காதல் மலர, அவள் வயிற்றில் குழந்தையும் உண்டாகிறது.

ஆனால், சில காரணங்களால் நாடியாவை ராயா பிரிய நேரிடுகிறது. மேலும், நாடியாவின் மூலம் தனக்கு கிடைத்த வாரிசையும் ராயா இழக்கிறார். ரெபேக்காவுடனான திருமணத்தின் போது நடக்கும் சண்டையில் ஏகப்பட்ட உயிர் பலிகள் ஏற்பட, அக்கா கங்காவையும் இழக்கும் சூழல் ஏற்படுகிறது.

ஒட்டுமொத்த சொந்த பந்தங்களையும் இழந்து விட்டு தவிக்கும் ராயாவுக்கு மெல்லிசா (மீனாட்சி சவுத்ரி) மூலம் மீண்டும் ஒரு வாழ்க்கை தொடங்குகிறது. ஆனால், அந்த வாழ்க்கைக்கும் விட்டக் குறை தொட்ட குறை மூலமாக பிரச்னைகள் வரத் தொடங்க தனது மனைவியையும் மகனையும் ராயா காப்பாற்றினாரா? இல்லையா? என்பது தான் இந்த டாக்ஸிக் படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: படம் முழுக்கவே யஷ்.. யஷ்.. யஷ் மட்டும் தான். அவரோட நடிப்பு வேறலெவல் வெறித்தனமாக உள்ளது. உடல் அமைப்பு, குடி போதை ஏறிய கண்கள் என நடிப்பில் மனுஷன் பிரித்து மேய்ந்து விட்டார். அவர் ஒருத்தருக்காகவே இந்த படத்தை ஒருமுறை பார்க்கலாம்.

யஷ்ஷை தாண்டி நயன்தாராவுக்கும் கியாரா அத்வானிக்கும் நடிக்க ஸ்பேஸ் கிடைத்துள்ளது. ஆனால், அதிகப்படியான படுக்கையறை காட்சிகளிலேயே பாதி படம் சென்ற நிலையில், படத்தின் எமோஷன் சரியாக கனெக்ட் ஆகவில்லை.

2ம் பாதியில் ராயா மற்றும் டிக்கெட் இருவருக்கும் இடையேயான காட்சிகள் பிரம்மிப்பை ஏற்படுத்தினாலும், முதல் பாதி வலுவாக இல்லாத சூழலில் 2வது பாதியும் பெரிதாக ஒட்ட மறுக்கிறது.

பிளஸ்: படத்தின் மிகப்பெரிய பிளஸ் புரொடக்‌ஷன் வேல்யூ தான். இந்த படத்தை இப்படியொரு பட்ஜெட்டில் எடுத்தால் தான் சிறப்பாக இருக்கும் என பணத்தை வாரிக் கொட்டியுள்ளனர். கிளைமேக்ஸில் வரும் அந்த பனிமலை காட்சியெல்லாம் பிரம்மாண்டமாக உள்ளது. ஆரம்பத்தில் இருந்தே காஸ்டிங் மற்றும் லொகேஷனுக்கு பெரிதாக செலவு செய்துள்ளது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. விஷால் மிஸ்ரா, ரவி பஸ்ரூர், தனிஷ் பக்சி, ஃபஹீம் அப்துல்லா மற்றும் அர்சியான் நிஜாமி பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் தங்களுடைய பெஸ்ட்டைக் கொடுத்துள்ளனர். ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு படத்தின் பிரம்மாண்டத்தையும் யஷ்ஷின் நடிப்பையும் பக்காவாக காட்சிப்படுத்தியுள்ளது.

மைனஸ்: தமிழ் டப்பிங் ஏதோ ஏஐ மூலம் போட்டு எடுத்த ஸ்க்ரிப்ட்டை டப்பிங் கலைஞர்கள் பேசியது போல உள்ளதால் முதல் பாதியிலேயே படம் பெரிதாக ரசிக்க முடியாமல் அந்நியமாக மாறி நிற்க, திடீரென படத்தில் வரும் அந்நியன் கதையெல்லாம் மொத்தமாக முடிச்சி விட்டீங்க போங்கடா என்கிற நிலையை தான் கடத்துகின்றன.

டாக்ஸிக்கான மனநிலை ஒருவரை எந்தளவுக்கு பாதிக்கும் என்பதை சொல்வதற்காக இவ்வளவு டாக்ஸிக்கான மனநிலையை ரசிகர்களுக்கு கடத்த தேவையில்லை என்றே தோன்றுகிறது. இயக்குநர் கீது மோகன்தாஸ் 2வது பாதியில் போட்ட உழைப்பை சற்று முதல் பாதியிலும் கவனமாக செதுக்கியிருந்தால் இந்த டாக்ஸிக்கின் தலை தப்பியிருக்கும்.