📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 11, 2026 02:02 AM

உணர்ச்சி மிகுதியில் தமிழை தாழ்த்தி பேசியதற்கு அமைச்சர் மரியவில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

உணர்ச்சி மிகுதியில் தமிழை தாழ்த்தி பேசியதற்கு அமைச்சர் மரியவில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

உணர்ச்சி மிகுதியில் தமிழை தாழ்த்தி பேசியதற்கு அமைச்சர் மரியவில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

சென்னை: உணர்ச்சி மிகுதியில் தமிழை தாழ்த்திப் பேசியதற்கு அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜ மாநில தலைவர் நையினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:

எம் தமிழ் மொழியின் ஆளுமையுடன், ஒரு மதத்தை ஒப்பிட்டு பேசுவது சரிதானா அமைச்சர் மரியவில்சன் அவர்களே?. இன்றைய சட்டமன்றத்தில் உங்கள் மொழியாற்றல் மீதான விவாதத்தின் போது, “எனது மதம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது” என்பதோடு நீங்கள் நிறுத்தியிருந்தால் அது உங்களின் தனிப்பட்ட அனுபவம். ஆனால், “எனது மதம் எனக்கு கற்று கொடுத்ததை, எத்தனை தமிழ் படித்தாலும் தெரிந்துகொள்ள முடியாது” என்று நீங்கள் கூறுவது, தமிழின் மீதான தாக்குதலாகத்தான் தெரிகிறது.

“அன்பு” என்ற வார்த்தைக்கு பல மதங்கள் கற்பித்த பல அர்த்தங்களை, \”அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” என்ற ஒற்றை வரியில் தூக்கி சாப்பிட்ட மொழிதான் நம் தாய் மொழி தமிழ். “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை விட, இரக்கத்தைப்பற்றி இவ்வுலகில் வேறு யாரால் நுட்பமாக எடுத்துரைக்க முடியும்? “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற புறநானூற்றுப் பாடலை நீங்கள் சரியாக படித்து புரிந்திருந்தாலே, “அமைதி” என்ற வார்த்தைக்கு தமிழ் மொழியில் உள்ள ஆழமான அர்த்தம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

பிறப்பால் நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், உணர்வால் நாம் அனைவரும் தமிழர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய சட்ட மன்றத்தில் கூட உங்கள் கட்சி தலைமையும் அதைத் தானே சுட்டிக்காட்டினார்? அப்படியிருக்கையில் உங்கள் மதத்தை நீங்கள் உயர்த்திப் பிடிப்பதில் தவறில்லை. ஆனால், தமிழ் மொழியை நீங்கள் தாழ்த்துவதை ஒருபோதும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இன்று உணர்ச்சி மிகுதியில் தமிழ்மொழி மீது வைத்த தவறான விமர்சனத்திற்கு நீங்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். இவ்வாறு பதிவில் கூறியுள்ளார்.

தமிழிசையும் கண்டனம்: முன்னாள் புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள பதிவு: ‘‘காலையில் தமிழை உயர்த்தி தமிழ்த்தாய்க்காக தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். மாலையில் ஆளும் கட்சியைச் சார்ந்த ஒரு அமைச்சரே தமிழுக்கும் அன்புக்கும் சம்பந்தமில்லை என்பதை போலவும் அன்பை அவர் சார்ந்துள்ள மதம் மட்டும்தான் போதிப்பதை போன்றும் பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அன்பே சிவமென்று இவர் சொல்லும் மதத்திற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஆன்மிகத்தோடு தமிழ் அன்பை போதித்திருக்கிறது. அனைவரின் தாய்மொழியை மதிக்கிறேன். அதே நேரத்தில் காலையில் தமிழுக்காக தீர்மானம் நிறைவேற்றிவிட்டு மலையாளத்தில் எழுதி தமிழைப் பேசும் விசித்திரமும் தமிழக சட்டமன்றத்தில்தான் நடந்திருக்கிறது. ஆக, இவர்கள் சொல்வது ஒன்று நடப்பது ஒன்று. ஆக, தமிழ் இவர்கள் வாயளவில்தான் இருக்கிறதே தவிர வாழ்க்கையில் இல்லை என்பதை இவர்கள் உணர்த்துகிறார்கள்’’ என்று கூறியுள்ளார்.