கிணற்றில் குதித்த மனநலம் பாதித்தவர் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீட்பு
கள்ளக்குறிச்சி: தச்சூரில் கிணற்றில் குதித்த மனநலம் பாதித்த நபரை தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்குப்பின் மீட்டனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூரில் விளைநிலத்தில் நேற்று (நவ.,25) இரவு 10:00 மணியளவில் சந்தேகப்படும்படி நின்றிறுந்த நபரை, அப்பகுதியினர் பிடித்து வைத்து போலீசுக்கு தகவல் அளித்தனர்.
கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அதில், அந்த நபரை திம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த செங்கமலை, 50; எனவும், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதம் தெரியவந்தது. விசாரித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென அந்த நபர் ஓடி அங்கிருந்த விவசாய கிணற்றில் குதித்தார்.
அதிர்ச்சியடைந்த போலீசார், கிணற்றுக்குள் குதித்த நபரை மேலே வரும்படி அழைத்தனர். ஆனால், அவர் மேல வர மறுத்து கிணறு நீருக்குள்ளேயே இருந்தார்.
தொடர்ந்து, கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., கலையரசன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று அழைத்தும் அவர் மேலே வர மறுப்பு தெரிவித்தார்.
ஒரு மணிநேர போராட்டத்திற்குப் பின், தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் செங்கமலையை மீட்டு, அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.