📅 Sunday, 09 August 2026 IST | ஆடி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 08, 2026 03:31 PM

விஜய் பக்குவமா நடந்துக்கணும்”

விஜய் பக்குவமா நடந்துக்கணும்”

"விஜய் பக்குவமா நடந்துக்கணும்” - ஜாமீனில் வந்த பிறகும் மீண்டும் முதல்வர் குறித்து மார்க்கண்டேயன் சர்ச்சை பேச்சு

திமுகவினரை கைது செய்து முடக்க முடியுமா? அப்படி எல்லாம் முடக்க முடியாது. திமுக அச்சப்படும் கட்சி கிடையாது - விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன்

தமிழக முதல்வர் பக்குவமாக நடந்து கொண்டால் பிரச்சனை இல்லை என்று சமீபத்தில் முதலமைச்சர் குறித்து சர்ச்சையாகி பேசி சிறைக்கு சென்று வந்த திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் அவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் கோவில்பட்டி பொதுக் கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த 20 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஆகஸ்ட் 3ந் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும் நீதிபதி சுமதி உத்தரவு பிறப்பித்தார்.

பின்னர், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு கடந்த 3ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது. பின்னர், ஜாமீன் வழங்கியதையடுத்து 4ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

மேலும், சட்டசபை நாட்களைத் தவிர தினமும் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் நேற்று சட்டசபை தினம் என்பதால் அவருக்கு கையெழுத்திட விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் இன்று மார்க்கண்டேயன் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வருகை தந்து கையெழுத்திட்டார்.

தொடர்ந்து, அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “மேற்கு வங்கத்திற்கு 75 சதவீதம், ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு முதலீடுகள் போய்விட்டது. தமிழ்நாட்டில் முதலீடுகள் குறைந்து இருக்கிறது. தமிழகத்திற்கு தொழில் செய்ய வந்தால் வழக்கு போட்டு விடுவார்களோ என்று பயப்படுகிறார்கள். மேலும், திமுகவினரை கைது செய்து முடக்க முடியுமா? அப்படி எல்லாம் முடக்க முடியாது. திமுக அச்சப்படும் கட்சி கிடையாது. ஜனநாயகத்தில் கருத்துக்களை சரியான முறையில் எடுத்து வைக்க கூடிய அரசியல் கட்சி.

தமிழக முதல்வர் பக்குவமாக நடந்து கொண்டால் பிரச்சனை இல்லை. இந்த அரசு தீவிரவாதவாதிகளை நடத்துவது போன்று நடத்துகிறது. ஜனநாயகத்தின் மிகப்பெரிய தூணாக இருப்பது சட்டமன்றம் அது அடைக்கப்படும் என்று சொன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்கான எதிர்வினை அரசியல் ரீதியாக சந்தித்திருக்கலாம் அல்லது வழக்கு போட்டு இருக்கலாம். ஆனால், பெரிய தீவிரவாதி போல இன்டர்நேஷனல் கிரிமினல் போல எங்கு திரும்பினாலும் போலீஸ் போட்டு எங்களையெல்லாம் பயம் காட்டுகிறார்கள்.

பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை. மக்கள் எதிர்பார்த்தது பட்ஜெட்டில் இல்லை. ரயிலில் வந்து விடும் என்று நினைத்தார்களோ என்று தெரியவில்லை. வாலியில் இருந்தால்தான் அகப்பைக்குள் வரும். தேர்தல் வாக்குறுதி சொன்ன எந்தவித திட்டங்களும் பட்ஜெட்டில் இல்லை. திமுக தனிப்பெரும் இயக்கம், ஜனநாயகம் எங்கு மறுக்கப்படுகிறதோ அது வெற்றிடமாக ஆகிவிடும்” என்றார்.

முன்னாள் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவை திருத்தணியில் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள் இதுகுறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? “பகவான் காத்திருக்கக்கூடிய நிலையை கொடுத்திருக்கிறார். ஆகவே காத்திருக்கிறார் அவர் பக்திமான் பொறுமையாக இருந்து சாமி கும்பிடுகிறார்.

நேற்று சட்டசபையில் நான் பேசிய பேச்சை மறந்து விடுங்கள் என்று சபாநாயகரிடம் மார்க்கண்டேயன் கூறினார். இதுகுறித்த கேள்விக்கு? தூத்துக்குடி மண்ணிற்கு இருக்கும் வேகம் விவேகமும் நான் சொல்லி இருக்கின்றேன். இதைப்போய் தேவையில்லாமல் சட்டசபையில் இழுக்க வேண்டாம். ஆகவே நேரத்தை வீணடிப்பதால் மறந்து விடுங்கள் என்று சொன்னேன்” என்றார்.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி