Aadhav Arjuna: முதல்வர் விஜய் லண்டன் பயணத்தில் நடப்பது என்ன? .. போன நோக்கம் இதுதான்.. போட்டுடைத்த
Aadhav Arjuna: முதல்வர் விஜய் லண்டன் பயணத்தில் நடப்பது என்ன? .. போன நோக்கம் இதுதான்.. போட்டுடைத்த ஆதவ் அர்ஜூனா!
முதல்வர் விஜய் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இப்பயணம் தமிழ்நாட்டின் விளையாட்டு வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் கார் பந்தயத்தை தொடங்கி வைத்த முதல் இந்தியர் என்ற பெருமையை முதலமைச்சர் விஜய் பெற்றுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “மோட்டார் விளையாட்டின் உச்சபட்சமாக இருக்கும் 'ஃபார்முலா ஒன்' உலக சாம்பியன்ஷிப் போட்டி, 1950 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 'The Le Mans Cup - Silverstone Round' போட்டியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இந்நிகழ்வை தொடங்கி வைத்த முதல் இந்தியர் என்ற பெருமையைக் கொண்டார்.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற திரைத்துறை நட்சத்திரமும், மோட்டார் விளையாட்டு வீரரும் எனது அன்புக்குரிய சகோதரருமான அஜித் குமாரின் சிறப்பு அழைப்பின் பேரில் இப்பயணத்தில் பங்கேற்றோம். 'மோட்டார் ஸ்போர்ட்ஸ்' மீதான அவரின் ஆர்வமும், தமிழ்நாட்டில் இந்த விளையாட்டை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அவரது தொலைநோக்குத் திட்டங்களும் நம்மை மிகவும் கவர்ந்தன. மோட்டார் விளையாட்டின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் அதன் பிரமாண்டத்தையும் அவர் பொறுமையாகவும் அர்ப்பணிப்புடனும் நம்மிடம் விளக்கினார். முன்னாள் இந்திய ‘ஃபார்முலா ஒன்’ வீரர் நரேன் கார்த்திகேயனும் உடனிருந்தார்.
தொடர்ந்து, இதுசார்ந்த உலகின் முன்னணி தொழில், வணிக மற்றும் விளையாட்டுத்துறைத் தலைவர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டோம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டியும் இப்பயணத்தில் பங்கேற்றார். நம் தமிழ்நாட்டில் உலகத்தரமான உள்கட்டமைப்பை அடித்தளமாக மேற்கொண்டு சர்வதேச தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாடாகும்.
இதன்பொருட்டு, தமிழ்நாட்டில் உலகத்தரமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி விரைவில் அமையப்பெற உள்ளது. முதல்வருடன் இணைந்து தமிழ்நாட்டை முதன்மையாகக் கொண்டு, இந்தியா முழுவதற்கும் சர்வதேச அளவிலான விளையாட்டு பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான பல புதிய தேடல்கள், கற்றல்கள், புதிய பார்வைகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டோம். முதல்வர் விஜய் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இப்பயணம் தமிழ்நாட்டின் விளையாட்டு வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும். தமிழ்நாடு விளையாட்டு கட்டமைப்பிலும் விளையாட்டுப் பொருளாதாரத்திலும் தலைசிறந்து விளங்கி, இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக உருவாகும்.
மேலும், தமிழக விளையாட்டுத்துறையை நவீனமயமாகவும் உலக நாடுகளுக்கு இணையாகவும் உருவாக்க வேண்டிய பல்வேறு புதிய செயல்திட்டங்களை இப்பயணத்துடன் மேற்கொண்டு வருகிறோம்” என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 10ம் தேதி லண்டன் புறப்பட்ட முதலமைச்சர் விஜய் மீண்டும் செப்டம்பர் 17ம் தேதி சென்னை திரும்பவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி