"அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாட வேண்டும்"
"அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாட வேண்டும்"- அரசாணை வெளியீடு
சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 10 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானத்தை ஏற்று, அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாட வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Published : August 12, 2026 at 10:01 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசின் பொதுத்துறை சார்பில் அரசாணையும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அரசாணையில், 1970ஆம் ஆண்டு நவம்பர் 23 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படி, அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடும் நடைமுறை அமலுக்கு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2021ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டதுடன், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாநிலப் பாடல் பாடப்படுவது தொடர்பாக ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் 2026 ஜூலை 9 அன்று கடிதம் அனுப்பியதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, 2026 ஆகஸ்ட் 10 அன்று, முதலமைச்சரால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்ட தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தீர்மானத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ் மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடு என்றும், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில் அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானத்தை ஏற்று, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுடன், மரியாதையுடன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்று தமிழக அரசு தற்போது ஆணையிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணை அனைத்து கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறைத் தலைமை அலுவலர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.