அர்ப்பணிப்பு பெற்றுத்தந்த அதிபர் விருது
ஈன்றெடுத்த மகன்கள் இருவர் என்றால், அன்பால் வளர்த்தெடுத்த மாணவர்கள் பல நூறு பேர். தமிழாசிரியர் கமலவாணி பாலையனின் கற்பித்தல் பயணம் தந்த பரிசு இது.
சிங்கப்பூரில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஆக உயரிய கௌரவமான அதிபர் விருதை இவ்வாண்டு பெற்ற எட்டு ஆசிரியர்களில் அவரும் ஒருவர்.
தமிழாசிரியார் ஆகவேண்டுமென்ற ஆசை சிறு வயதிலேயே அவரது மனத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தது.
“எனக்குப் பள்ளியில் மிகப்பிடித்த பாடங்களில் தமிழும் ஒன்று. வீட்டில் தமிழ் பேசுவது, தமிழ் வானொலி கேட்பது, தமிழ்ப் புத்தகங்கள் படிப்பது என அனைத்துமே தமிழில் இருந்ததால் எனக்கு மொழி ஆற்றல் இயல்பாக உருவாயிற்று,” என்றார் அவர்.
தொடக்கப்பள்ளியில் தொடங்கிய அவரது ஆசிரியர் பணி இன்று அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரியில் தொடர்கிறது.
தொடக்கப்பள்ளியில் மாணவர்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்பதில் அதிகக் கவனம் செலுத்திய அவர், இன்றளவும் அப்பழக்கத்தைப் பின்பற்றி வருகிறார்.
“என் வகுப்பிற்கு வரும் அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக உணர வேண்டும்; அவர்களுக்குத் தமிழுடன் வாழ்க்கையையும் கற்பிக்க வேண்டும் என்பதை மனத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறேன்,” என்று அவர் கூறினார்.
1995ல் மேஃபிளவர் தொடக்கப்பள்ளியில் பணியைத் தொடங்கி, 1999ல் தமிழ்ப் பட்டப்படிப்பிற்காக மதுரை சென்று, பின்னர் 2002லிருந்து 2004 வரை டெயி உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து, 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி சிராங்கூன் தொடக்கல்லூரியை வந்தடைந்தார் திருவாட்டி கமலவாணி.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
தமது வகுப்பிலிருக்கும் மாணவர்கள் அனைவரையும் தமது பிள்ளைகளாகவே அவர் பார்க்கிறார்.
“மாணவர்களுக்கு மொழிசார்ந்த பிரச்சினைகள் மட்டும் இருப்பதில்லை. ஆற்றல் இல்லை, திறமை இல்லை எனப் புறக்கணிக்கப்படும் மாணவர்களை அரவணைத்து அவர்களுக்கு நம்பிக்கையூட்டும்போது, அவர்கள் பலவற்றைச் சாதிப்பர்.
“இன்றும் முன்னாள் மாணவர்கள் பலர் என்னைக் காணும்போது முகமலர்ச்சியுடன் வந்து அணைத்துக்கொள்வார்கள். சிலர் நான் அவர்களுடன் நேரம் செலவிடுவதில்லை என்று கோபித்தும் கொள்வார்கள். மாணவர்களுடன் அத்தகைய பிணைப்பை உருவாக்க முடிந்தது நிறைவளிக்கிறது,” என்றார் திருவாட்டி கமலவாணி.
மாணவர்களின் குரல்கள்
திருவாட்டி கமலவாணியின் மாணவர்கள் பலர் இன்று வெவ்வேறு துறைகளில் சாதித்துள்ளனர்.
அத்தகையோரில் ஒருவர் தமிழ் நாடக எழுத்தாளரும் நடிகருமான 37 வயது சையது அஷ்ரத்துல்லா.
கூச்ச சுபாவத்துடன் வகுப்பில் அமைதியாக இருந்த அவருக்கு நடிப்புத் திறன் இருப்பதைக் கண்டறிந்து கதாகாலட்சேபத்தை அவருக்கு அறிமுகப்படுத்தியவர் திருவாட்டி கமலவாணி.
“கலை, நாடகம், எழுத்து ஆகியவற்றின்மீதான எனது ஆர்வத்திற்கு வித்திட்டவர் ஆசிரியர்தான். அவரது வீட்டில் நாங்கள் பல நாள் பயிற்சி செய்துள்ளோம். அதனால், அவரது குடும்பத்தில் ஓர் அங்கமாகவே மாறிவிட்டோம். இன்று தன்னம்பிக்கையுடன் மேடையேறி நடிக்கிறேன், எழுதுகிறேன் என்றால் அதற்கு முக்கியக் காரணம் அவர்தான்,” என்று சையத் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பல்கலைக்கழகத்தில் தற்போது தகவல் அமைப்புகள் துறையில் பயின்றுவரும் டோம்னிக் ஜெரோம், 25, தமக்குத் தமிழ் மொழியின்மீதான வேட்கையை ஏற்படுத்தியது திருவாட்டி கமலவாணி என்று கூறினார்.
“நான் தொடக்கக்கல்லூரியில் என் முதலாம் ஆண்டை மீண்டும் படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போதுதான் தமிழ் இலக்கியப்பாடம் எடுத்து ஆசிரியரைச் சந்தித்தேன். அக்கட்டத்தில் அன்றாடம் பள்ளிக்குச் செல்வதற்கே சங்கடமாக இருக்கும்.
“ஆனால், அவர் என்னை ஒருபோதும் வேறுபடுத்திப் பார்த்ததில்லை. என்னைத் தொடர்ந்து ஊக்குவித்தார். ஒரு நாள் என் பெற்றோரிடம் அவர்கள் என்னை எண்ணிப் பெருமைகொள்ள வேண்டுமென அவர் கூறியபோது என் தாயாரின் கண்களில் நீர் தேங்கி நின்றது இன்றும் நினைவில் உள்ளது.
“என்மேல் நானே நம்பிக்கை வைக்காதபோது என்மீது நம்பிக்கை வைத்தவர் அவர்,” என்று டோம்னிக் கூறினார்.
திருவாட்டி கமலவாணி தொடக்கக் கல்லூரியில் கற்பிக்கத் தொடங்கிய காலத்து மாணவர்களில் ஒருவரான திருமதி புனிதா, 38, தற்போது தமிழாசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
“22 ஆண்டுகளுக்குமுன் ஆசிரியர், தொடக்கக் கல்லூரிக்கு வந்தபோது அவருக்கு பல கற்றல் வளங்கள் எளிதாகக் கிடைக்கவில்லை. ஆனால், அவர் அதை எண்ணிக் கலங்கவில்லை.
“தாமே பல மணி நேரம் உழைத்து, கைப்பட எங்களுக்காக வளங்களைத் தயார் செய்தார். அவற்றுள் சிலவற்றை நான் இன்றும் பாதுகாப்பாக வைத்துள்ளேன்,” என்றார் திருமதி புனிதா.
திருவாட்டி கமலவாணி மாணவர்கள்மீது கொண்டுள்ள தாக்கத்தை அமைதி, ஊக்கம், மாற்றம் என்ற மூன்று சொற்கள் எடுத்துக்கூறுமென அவர் சுட்டினார்.
பகுதி நேரத் தமிழ் வானொலிப் படைப்பாளரான 22 வயது கிரிஷ்மிதா ஷிவ் ராம், தாம் திருவாட்டி கமலவாணியிடமிருந்து தமிழ் மட்டுமல்லாமல் முக்கிய வாழ்க்கை விழுமியங்களையும் கற்றதாகக் குறிப்பிட்டார்.
“நேர மேலாண்மையை எனக்குப் புகட்டியவர் ஆசிரியர்தான். அத்திறன் எனக்கு இன்று மிகவும் உதவிகரமாக உள்ளது. அதுமட்டுமன்றி, அவர் எங்கள் அனைவருக்குமே தாய் போன்றவர்.
“அவருடன் நான் ஆசிரியர் தினம் கொண்டாடியதைவிட அன்னையர் தினம் கொண்டாடியதுதான் அதிகம்,” என்றார் அவர்.
தாங்கள் தமிழ் மொழியுடன் வாழ்வையும் கற்க பாதுகாப்பான, ஏதுவான, சிறப்பான சூழலைத் திருவாட்டி கமலவாணி உருவாக்கித் தந்ததாகக் காவியா பிரபாகரன், பெரியகருப்பன் சீனிவாசன், சௌந்தர்யா ராஜன், வித்தியா லெஷ்மி ஆகியோர் கூறினர்.
இரண்டு வாணிகளால் இரட்டிப்பு ஆனந்தம்
அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் தமிழாசிரியர்களாகப் பணிபுரியும் திருவாட்டி கமலவாணிக்கும் செல்வி கலைவாணி இளங்கோவிற்கும் கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு வெவ்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 29ஆம் தேதி உமறுப் புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் தமிழ் முரசு, தமிழ் வளர்ச்சிக் குழு, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த நல்லாசிரியர் விருது நிகழ்ச்சியில் செல்வி கலைவாணிக்கு ‘நல்லாசிரியர் விருது 2026’ வழங்கப்பட்டது.
அவ்விருதைத் திருவாட்டி கமலவாணி 2006லும் 2013லும் பெற்றுள்ளார்.
திருவாட்டி கமலவாணியுடன் இணைந்து பணியாற்றுவது தமக்கு மனநிறைவு அளிப்பதாகக் கூறினார் செல்வி கலைவாணி.
“அவருடன் நான் பணியாற்றிவரும் ஈராண்டுகளில் அவர் எனக்கு என்றும் ஊக்கமளிக்கத் தவறியதில்லை. நான் அவரிடம் பல முக்கியத் திறன்களைக் கற்றுக்கொண்டுள்ளேன். அவருக்கு அதிபர் விருது கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி,” என்றார் செல்வி கலைவாணி.
திருவாட்டி கமலவாணி சிங்கப்பூர்க் கல்விச் சமூகத்திற்குக் கிடைத்த அரிய பொக்கிஷம் என்றார் அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரித் தலைமையாசிரியர் ஹெங் இயு செங்.
“ஒவ்வொரு மாணவரிடமும் சிறந்து விளங்கும் ஆற்றல் உள்ளதென்று ஆழமாக நம்பும் திருவாட்டி கமலவாணி, அவரது மாணவர்கள் தங்களது முழுத் திறனை வெளிக்கொணரத் தொடர்ந்து ஊக்குவிக்கிறார்.
“அவரது மனவுறுதி, கனிவு, அர்ப்பணிப்பு ஆகியவை பள்ளியிலுள்ள சக ஆசிரியர்கள், மாணவர்கள், பரந்த கல்விச் சமூகத்தினர் என அனைவரின் ஆழ்ந்த மரியாதையையும் பெற்றுள்ளன,” என்றார் அவர்.
குடும்ப ஆதரவு
தமது ஆசிரியர் பயணத்தில் கணவரும் மகன்கள் இருவரும் உறுதுணையாக இருந்துவருகின்றனர் என்று திருவாட்டி கமலவாணி குறிப்பிட்டார்.
“பிள்ளைகள் வளரும் கட்டத்தில் தாயார், ஆசிரியர் என்ற இரு பொறுப்புகளையும் சமாளிப்பது கடினமாக இருந்தாலும், அவற்றைச் செவ்வனே செய்ய குடும்பத்தின் ஆதரவு இன்றியமையாததாக இருந்தது,” என்றார் அவர்.
இளம் ஆசிரியர்களுக்கான அறிவுரை
“ஓர் ஆசிரியராக இருக்கும்போது நாம் இளையர்கள் பலரின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறோம். அது சரியான தாக்கமாக இருப்பதை உறுதிசெய்வது அவசியம்,” என்று திருவாட்டி கமலவாணி வலியுறுத்தினார்.
ஆசிரியர்கள் தொடர்ந்து கற்று, திறன்களை மேம்படுத்திக்கொள்வது மிகவும் அவசியமென்று அவர் கூறினார்.
இன்றும் தாம் மாணவர்களுக்குக் கற்பிப்பது மட்டுமன்றி தாமும் மாணவர்களிடமிருந்து கற்கும் இருவழிக் கற்றலைப் பின்பற்றுவதாக அவர் சொன்னார்.