📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 02, 2026 09:04 AM

சமூக முன்னேற்றத்திற்குப் பங்காற்றிய 20 இந்தியர்களுக்குக் கௌரவம்

சமூக முன்னேற்றத்திற்குப் பங்காற்றிய 20 இந்தியர்களுக்குக் கௌரவம்

சிங்கப்பூரின் புகழ்பெற்ற இந்தியர்கள் பட்டியலில் இடம்பிடித்தோர்க்கு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) ராஃபிள்ஸ் டவுன் கிளப்பில் நடைபெற்றது. அதில் சமூகத்திற்குப் பங்காற்றிய 20 பேர் கௌரவிக்கப்பட்டனர்.

சிங்கப்பூரின் இந்தியச் சமூகத்தினரின் பங்களிப்புகளை அங்கீகரிக்க புகழ்பெற்ற இந்தியர்கள் மன்றம் 2019ல் நிறுவப்பட்டது.

நிறுவனத் தலைவரான எஸ்.ஏ.நாதனின் முயற்சிகளால் மன்றம் தொடங்கப்பட்டது. புகழ்பெற்ற இதழான ‘இந்தியன் மூவி நியூஸ்’ வெளியீட்டாளரும் அதன் நிர்வாக ஆசிரியருமான திரு நாதன், ‘சிங்கப்பூர்: நாட்டு நிர்மாணம், இந்தியர்களின் மரபு’ (Singapore: Nation Building & Indians’ Legacy) என்ற நூலின் ஆசிரியருமாவார்.

அந்நூலை எழுதிய பிறகே, சமூகத்திற்குப் பங்களிப்பதில் தங்களின் கடமைக்கு அப்பாற்பட்டு செயல்படும் இந்தியர்களை அங்கீகரிக்க ஒரு முன்னெடுப்பைத் தொடங்க அவர் முடிவெடுத்தார்.

தமது முயற்சிகளுக்கும் பங்களிப்புகளுக்கும் திரு நாதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

“இந்தியர்கள் தகுந்த அங்கீகாரத்தைப் பெறவில்லை என்பதை நான் உணர்ந்தேன். அதனால் பல்வேறு துறைகளில் திறன்கொண்ட இந்தியர்களை அடையாளம் காண நான் முனைந்தேன். அன்றைய மீன்பிடி கிராமத்திலிருந்து இன்றைய நவீன நகராக சிங்கப்பூர் உருவெடுக்க உதவியவர்கள் அவர்களே. இத்தகைய முக்கியப் பங்காற்றியதற்காக அவர்கள் நிச்சயம் அங்கீகரிக்கப்பட வேண்டும்,” என்று திரு நாதன் கூறினார்.

சிங்கப்பூர் இந்தியர்கள் தொழில்துறை, விளையாட்டு, சமூகம், கலாசாரம், அரசியல், கல்வி போன்ற பல துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி, நாட்டின் வளர்ச்சிக்குப் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளனர். அத்தகையோரின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், ‘ஹால் ஆஃப் ஃபேம்’ அமைப்பு ஈராண்டுகளுக்கு ஒருமுறை விருதுகளை வழங்கி அவர்களைக் கௌரவிக்கிறது.

வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“மற்றவர்களுக்கு உதவக்கூடிய சக்தி நம் எல்லார்க்கும் உள்ளது. சில நேரங்களில் இந்தச் சக்தியை விழித்தெழச் செய்ய நமக்கு ஓர் உதவிக்கரம் மட்டுமே தேவையாக இருக்கிறது.

“இன்றைய விருது வெற்றியாளர்கள் இளையர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள். அவர்கள் நிச்சயமாகப் பலரை ஊக்கப்படுத்துவார்கள்,” என்றார் டாக்டர் ஹமீது.

இதற்கிடையே, பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான விருதை திருவாட்டி பிரேமா மதி பெற்றார். மாதர் செயலாய்வுச் சங்கத்துடன் (அவேர்) இணைந்து பணியாற்றி, குடும்ப வன்முறைக்கும் பாலின ஏற்றத்தாழ்வுக்கும் எதிராக அவர் போராடியவர்.

வசதிகுறைந்த பின்னணியைக் கொண்ட சிறார்கள் தங்களின் கல்விச் செலவுகளைச் சமாளிக்க உதவ, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைக்காசு நிதியைத் தொடங்குவது குறித்த யோசனையை அவர் முன்வைத்தார். அவரின் முயிற்சியின் பலனாக 2000 அக்டோபரில் சிறார் தினத்தில் அந்த நிதி தொடங்கப்பட்டது.

“சமூகத்தில் தமிழ்ப் பெண்களுக்கு அதிகாரமளிப்பது முக்கியம். இளம்பெண்கள், ஆண்கள் இருதரப்புமே தைரியமாக இருப்பதற்கு ஊக்கமளிக்க நான் விரும்புகிறேன்,” என்றார் முன்னாள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளரான திருவாட்டி பிரேமா, 68.

திரு ஹர்பஜன் சிங் லூம்பா, 89, சிங்கப்பூரின் ஹாக்கி விளையாட்டில் ஓர் ஆட்டக்காரர், பயிற்சியாளர், நடுவர் எனப் பல்வேறு பரிமாணங்களில் சிறந்து விளங்கியவர். அனைத்துலக நடுவராகத் தனது விளையாட்டுப் பயணத்தை நிறைவுசெய்த அவர், விளையாட்டுத் துறைக்கான விருதைப் பெற்றார்.

“பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கௌரவிக்கப்படுவது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த அங்கீகாரம் அவர்களின் அயராத உழைப்பிற்குத் கிட்டிய பரிசாகும். இன்றைய இளையத் தலைமுறையினர் கல்வி, விளையாட்டு என இரண்டிலுமே தங்களின் உன்னதத் திறனை வெளிப்படுத்த வேண்டும் என்பதே என் விருப்பம்,” என்று திரு லூம்பா குறிப்பிட்டார்.

சமூகத்திற்குப் பங்களித்தவர்களைத் தேசிய அளவில் அங்கீகரிப்பதற்காக சிங்கப்பூரில் அமைக்கப்பட்ட இத்தகைய முதல் அமைப்பு, சிங்கப்பூரின் புகழ்பெற்ற இந்தியர்கள் மன்றம் ஆகும்.