📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health August 27, 2026 12:04 PM

H1N1 பன்றிக் காய்ச்சல் குறித்து பயப்பட வேண்டாம்! சட்டப்பேரவையில் அமைச்சர் அருண்ராஜ் பேச்சு!

H1N1 பன்றிக் காய்ச்சல் குறித்து பயப்பட வேண்டாம்! சட்டப்பேரவையில் அமைச்சர் அருண்ராஜ் பேச்சு!

சென்னை : இன்று கூடிய தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், மாநிலத்தில் வேகமாகப் பரவிவரும் H1N1 பன்றிக் காய்ச்சல் குறித்தும், அதனைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அவைக் கூட்டத்தின் கேள்வி நேரத்தின் போது திமுக சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்துப் பேசினார். தமிழகத்தில் கடந்த காலங்களை விட தற்போது வேகமாகப் பரவிவரும் H1N1 காய்ச்சலைக் கட்டுப்படுத்த முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் சிறப்புக் திட்டம் ஏதேனும் அரசிடம் நடைமுறையில் உள்ளதா என்று திமுக உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்து அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் பேசுகையில், மக்களிடையே பரவிவரும் இந்த H1N1 காய்ச்சல் தற்போது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் தான் உள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் இது குறித்துப் பயமோ அச்சமோ கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டைப் பொருத்தவரை ஆண்டின் முதல் நான்கு மாதங்களான ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இதன் தாக்கம் சற்று அதிகமாக இருந்ததாகவும், நடப்பாண்டில் மே, ஜூன், ஜூலை மற்றும் தற்போதைய ஆகஸ்ட் மாதங்களில் இதன் பரவல் சற்று கூடுதலாகக் காணப்பட்டாலும், நிலைமை அரசின் தொடர்ச்சியான தீவிரக் கண்காணிப்பில் உள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

மேலும், சட்டமன்ற உறுப்பினர் குறிப்பிட்டது போன்று முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களைத்தான் இந்த நோய் மிக எளிதாகப் பாதிக்கக் கூடிய ஆபத்து உள்ளது என்பதை அரசு முழுமையாக உணர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாகத் துறை ரீதியான முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தேவைப்படும் பட்சத்தில் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு H1N1 தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசு கண்டிப்பாகத் தீவிரமாக மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவையில் உறுதியளித்தார்.