தென்கிழக்காசியா
ஆசியான் கூட்டமைப்பின் தலைமைத்துவப் பொறுப்பை சிங்கப்பூர் 2027ஆம் ஆண்டு ஏற்கவுள்ளது.
அதனைத் தொடர்ந்து தென்கிழக்காசியாவுக்கும் மத்திய ஆசியாவுக்கும் இடையிலான தொடர்புகளை எவ்வாறு மேலும் வலுப்படுத்தலாம் என்பதை சிங்கப்பூர் ஆராயவுள்ளது.
பொதுவாக தான் இணைந்து பணியாற்றும் பங்காளிகளையும் தாண்டி இதர தரப்புகளுடன் எவ்வாறு ஒத்துழைக்கலாம் என்பதை சிங்கப்பூர் ஆராய்ந்துவருகிறது. அந்த வகையில், பொருளியல் ஆற்றல் வளர்ந்துவரும் மத்திய ஆசிய வட்டாரத்தின்மீதும் அது கவனம் கொண்டுவருகிறது. இந்நிலையில், இச்செய்தி வெளியாகியுள்ளது.
கூடுதல் ஒத்துழைப்பு
போக்குவரத்து, தொடர்பு, எரிசக்தி, நீடித்த நிலைத்தன்மை வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தென்கிழக்காசியாவும் மத்திய ஆசியாவும் எவ்வாறு மேலும் ஒத்துழைக்கலாம் என்பதை சிங்கப்பூர் ஆராயும் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் புதன்கிழமை (ஆகஸ்ட் 26) தெரிவித்தார்.
“ஆசியான் தலைவர் என்ற பொறுப்பில் பொதுவாக நாங்கள் ஒத்துழைக்கும் பங்காளிகளையும் தாண்டி மற்ற தரப்புகள் மூலமாகவும் ஆசியானுக்குக் கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர சிங்கப்பூர் ஆவலாக இருக்கிறது,” என்று திரு லீ கஸக்ஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்ற சடங்கு ஒன்றில் கூறினார். அந்நிகழ்வில் அந்நாட்டு அதிபர் கசிம்-ஜொமார்ட் டொக்காயெவ் திரு லீக்கு நட்புக்கான உயரிய விருதை (Order of Dostyk of the First Class) வழங்கி கெளரவித்தார்.
“தென்கிழக்காசியாவும் மத்திய ஆசியாவும் எவ்வாறு மேலும் அணுக்கமாகச் செயல்படலாம் என்பதை நாங்கள் ஆராய்வோம்,” என்றும் திரு லீ குறிப்பிட்டார்.
திரு லீக்கு வழங்கப்பட்ட விருது, நட்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த முயற்சிகளை எடுப்போருக்கு கஸக்ஸ்தான் அரசாங்கம் வழங்கும் விருதாகும். கடந்த 30 ஆண்டுகளில் சிங்கப்பூரையும் கஸக்ஸ்தானையும் நெருக்கமாக்க உழைத்த இருநாட்டு மக்களின் சார்பில் விருதைத் தாம் ஏற்றுக்கொண்டதாக திரு லீ தெரிவித்தார்.
கையெழுத்தான ஒப்பந்தங்கள்
முக்கிய ஐரோப்பிய-ஆசிய வர்த்தகப் பாதையின் மின்னிலக்க ஒருங்கிணைப்பு (digital integration of a major Eurasian trade route), நீர் நிர்வாகம் ஆகியவற்றின் தொடர்பில் இரு நாடுகளும் புதன்கிழமை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. அதனையொட்டி இரு வட்டாரங்களுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிக்கு ஊக்குவிக்கப்படுகிறது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
கஸக்ஸ்தான், மத்திய ஆசியாவில் சிங்கப்பூரின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியாகும். இருதரப்புக்கும் இடையிலான பொருள் வர்த்தகத்தின் மதிப்பு 326.6 மில்லியன் வெள்ளியாகப் பதிவானது. அதேபோல், சேவை வர்த்தகத்தின் மதிப்பு 159 மில்லியன் வெள்ளியாகப் பதிவானது.
மேலும், கஸக்ஸ்தானில் சிங்கப்பூரின் நேரடி முதலீடுகளின் மதிப்பு 2.1 பில்லியன் வெள்ளியாகும். 158 சிங்கப்பூர் நிறுவனங்கள் கஸக்ஸ்தானில் செயல்பட்டுவருகின்றன.