மலேசிய ஏற்றுமதி 38% வளர்ச்சி: வணிக ஏற்றம்
கோலாலம்பூர்: கடந்த ஜூலை மாதத்தில் மலேசியாவின் ஏற்றுமதி, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 38 விழுக்காடு வரை அதிகரித்து எதிர்பார்த்ததைவிடப் பேரளவு வளர்ச்சி கண்டுள்ளதாக மலேசிய அரசாங்கம் தெரிவிப்பதாக ஆகஸ்ட் 20 அன்று வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ தரவுகள் கூறுகின்றன.
மலேசியாவின் மொத்த வணிகம் 2026 ஜூலையில் 364.74 பில்லியன் ரிங்கிட் என்ற புதிய மாதாந்திர சாதனையை எட்டியுள்ளது.
இதில் ஏற்றுமதி 38 விழுக்காடு உயர்ந்து 193.6 பில்லியன் ரிங்கிட்டாகவும் இறக்குமதி 36.4 விழுக்காடு உயர்ந்து 171.14 பில்லியன் ரிங்கிட்டாகவும் பதிவாகியுள்ளதாக மலேசிய முதலீடு, வணிகம், தொழில்துறை அமைச்சு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கை தெரிவித்தது.
வணிக உபரி 22.46 பில்லியன் ரிங்கிட்டாக விரிவடைந்தது. 2020 மே மாதம் முதல் தொடர்ந்து 75வது மாதமாகத் தனது உபரி நிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
பகுதி மின்கடத்தி உள்ளிட்ட உயர் மதிப்புமிக்க மின்னணுப் பொருள்களுக்கான தேவை 51 விழுக்காடு உயர்ந்து 95.65 பில்லியன் ரிங்கிட்டை எட்டியது இமாலய வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
அத்துடன் இயந்திரங்கள், பெட்ரோலியப் பொருள்கள், கம்பியிழை நார் சாதனங்கள், பாமாயில் ஏற்றுமதியும் கணிசமாகப் பங்களித்தன.
சீனாவுக்கான ஏற்றுமதி 30.2 விழுக்காடு அதிகரித்து 20.59 பில்லியன் ரிங்கிட் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டது. தைவானுக்கான ஏற்றுமதி இரு மடங்காக உயர்ந்து 15.36 பில்லியன் ரிங்கிட்டாகப் பதிவானது. ஆசியான் நாடுகளுக்கான ஏற்றுமதி 28.8 விழுக்காடு வளர்ச்சியடைந்தது.
உற்பத்தி, விவசாயம், சுரங்கத் துறை ஆகிய துறைகளின் வலுவான செயல்திறனால் மலேசியாவின் வணிகம் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.