நேபாளம்
நேபாளம்–திபெத் எல்லையில் திடீர் வெள்ளம்: 20 பேர் உயிரிழப்பு, 384 பேர் மாயம்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
நேபாளம்-திபெத் எல்லைக்கு அருகே ஏற்பட்ட பயங்கரமான திடீர் வெள்ளப்பெருக்கில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை. காணாமல் போனவர்களில் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் சூழலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
இமயமலை எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஆற்றில் பெருமளவு சேறும் பாறைகளும் சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து, நேபாளப் பகுதியில் புதன்கிழமை கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வீடுகள், சாலைகள் மற்றும் நீர்மின் திட்டங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனிடையே, திபெத் அதிகாரிகள் அப்பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், கணிசமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
நேபாள சுற்றுலாத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, 105 இந்தியர்கள், 93 நேபாளிகள், மூன்று அமெரிக்கர்கள் மற்றும் 12 இங்கிலாந்து நாட்டினர் உள்பட குறைந்தது 384 பயணிகள் காணாமல் போயுள்ளனர்.
தென்கொரியாவைச் சேர்ந்த ஏறத்தாழ எட்டு பேரையும் காணவில்லை என தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நிலநடுக்கம் காரணமாக பனிச்சரிவு ஏற்பட்டு, அதுவே இந்த வெள்ளப்பெருக்குக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிசிர் கனால் அவர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேபாளத்திலிருந்து பாயும் பல ஆறுகள் இந்தியச் சமவெளிப் பகுதிகளுக்குள் நுழைவதால், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எல்லையின் இருபுறமும் உள்ள அதிகாரிகள் பேரழிவின் அளவைக் கணித்து வரும் அதே வேளையில், மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.