📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 27, 2026 11:04 AM

நேப்பாள வெள்ளம்: சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்க அமைச்சு அறிவுறுத்தல்

நேப்பாள வெள்ளம்: சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்க அமைச்சு அறிவுறுத்தல்

காத்மாண்டு: நேப்பாளத்தில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள சிங்கப்பூரர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

நேப்பாளம் - திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவாலும் வெள்ளப்பெருக்கினாலும் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை. பனிப்பாறை சரிந்ததால் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கலாம் என வல்லுநர்கள் கருதுகின்றனர். காணாமற்போன வெளிநாட்டினர் 341 பேரில் இருவர் சிங்கப்பூரர்கள் என்றும் அவர்கள் மலையேற்றக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) வெளியிட்ட அறிக்கையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரசுவா, நுவாகோட், தாடிங், கோர்கா, சித்வான் ஆகிய பகுதிகளுக்குச் செல்வதைச் சிங்கப்பூரர்கள் தவிர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஆறுகள், ஆற்றங்கரைகள், தாழ்வான பகுதிகளை விட்டு விலகி இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இடங்களில் போக்குவரத்து, தகவல் தொடர்பு உள்ளிட்ட அத்தியாவசியச் சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், பயணத்திற்குமுன் உள்ளூர்ச் சாலை, வானிலை நிலவரங்களைச் சரிபார்க்குமாறு அமைச்சு ஆலோசனை கூறியுள்ளது.

நேப்பாளத்தில் உள்ள அல்லது அங்குச் செல்லும் சிங்கப்பூரர்கள் அமைச்சிடம் மின்னிலக்கப் பதிவு (eRegister) செய்துகொள்ளுமாறும் தூதரக உதவிக்கு புதுடெல்லியில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தைத் தொடர்புகொள்ளலாம். அல்லது 24 மணி நேரமும் செயல்படும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் அலுவலகத்தை நாடலாம்.