📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 17, 2026 08:31 AM

வலுவான ஒத்துழைப்பை வரவேற்கும் சிங்கப்பூர்

வலுவான ஒத்துழைப்பை வரவேற்கும் சிங்கப்பூர்

கோலாலம்பூர்: சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே மேலும் வலுவான பங்காளித்துவத்துக்கு இருநாட்டுத் தலைவர்களும் திங்கட்கிழமை (ஜூலை 13) பரிந்துரைத்துள்ளனர்.

நீடித்த நிலைத்தன்மை சார்ந்த மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளும் அவற்றில் அடங்கும்.

இருநாட்டு மக்கள் தொடர்பை விரிவுபடுத்தவேண்டும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னமும் மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தரும் கேட்டுக்கொண்டனர்.

இளைய தலைமுறையினர்மீது கவனம் செலுத்தப்படவேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

நான்குநாள் அதிகாரபூர்வப் பயணத்தின் ஒரு பகுதியாக மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா நெகாரா அரச மாளிகையில் அதிபர் தர்மன், மலேசிய மாமன்னரைச் சந்தித்தார்.

அப்போது, இருநாடுகளுக்கு இடையிலான வலுவான நல்லுறவு, ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் பேசினர்.

விநியோகத் தொடர் சார்ந்த மீள்திறன், முக்கிய அம்சங்களில் ஒத்துழைப்பு, ஜோகூர் பாரு - சிங்கப்பூர் விரைவு ரயில் திட்டம் போன்ற கூட்டுச் செயல் திட்டங்கள் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் நேர்மறையான இருநாட்டு நல்லுறவை இருதரப்பும் வரவேற்றன என்று வெளியுறவு அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமை அதேநாளில் சந்தித்தார் அதிபர் தர்மன். இருவரும் இணைந்து உலக விவகாரங்களைப் பற்றி, குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் பூசல் குறித்தும் விவாதித்தனர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

உணவுப் பாதுகாப்பு, எரிபொருள் போன்ற இருநாடுகளால் பகிரப்படும் முக்கிய அம்சங்களில் சிங்கப்பூரும் மலேசியாவும் இருதரப்பு உறவை மேலும் ஆழப்படுத்த வேண்டும் என்பதை இருவரும் மறுவுறுதிப்படுத்தினர்.

அனைத்துலகச் சட்டத்தைக் கட்டிக்காப்பதன் முக்கியத்துவம் பற்றி இருவரும் கூட்டாகப் பரிந்துரைகள் செய்தனர்.

அதன்படி, கடலில் சுதந்திரமாக கப்பல் பயணம் செய்வதை பாதுகாத்தல், முக்கியமாக ஐக்கிய நாடுகள் அமைத்த உலகளாவிய கடல் சட்ட உடன்படிக்கையைக் கடைப்பிடித்தல் ஆகியவை பற்றி இருவரும் குறிப்பிட்டனர்.